நீண்ட ஆயுளுடன் மக்கள் சேவையாற்றுமாறு பாமக நிறுவனர் ராமதாஸுக்கு, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸின் 83-வது பிறந்த நாளையொட்டி, இன்று (ஜூலை 25) அவரை தொலைபேசியில் தொடர்புகொண்டு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அப்போது, பூரண உடல் ஆரோக்கியத்தோடு, நீண்ட ஆயுளுடன் மக்கள் சேவையாற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளதாக ஆளுநர் மாளிகை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோரும் ராமதாஸை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு வாழ்த்தினர். அதேபோன்று, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோரும் ராமதாஸை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு வாழ்த்தினார்.
மேலும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ராமதாஸுக்கு தன் ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், "காட்சிக்கு எளியவர் - மனத்தால் எளியோரின் மருத்துவர் கடிகாரம் - அதற்கு நேரம் சொல்லும் நியமம் கொண்டவர், இளைஞருக்கு வழிகாட்டும் பண்பாளர் பாமக நிறுவனர், தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் மூத்தவர் ராமதாஸை அவர் பிறந்த நாளில் வணங்குகிறேன்" என பதிவிட்டுள்ளார்.
காட்சிக்கு எளியவர் - மனத்தால் எளியோரின் மருத்துவர்
கடிகாரம் - அதற்கு நேரம் சொல்லும் நியமம் கொண்டவர்
இளைஞருக்கு வழிகாட்டும் பண்பாளர்
பாமக நிறுவனர்
தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியின் மூத்தவர்
நம் மருத்துவர் அய்யாவை @drramadoss அவர் பிறந்த நாளில் வணங்குகிறேன்