தமிழகம்

அரசு ஊழியர் ஓய்வு வயதை 58 ஆக குறைக்க வேண்டும்: முதல்வருக்கு கி.வீரமணி வேண்டுகோள்

செய்திப்பிரிவு

வேலையில்லாதோர் எண்ணிக்கை 67 லட்சத்தையும் கடந்த நிலையில், அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 58 ஆக குறைக்க வேண்டியது அவசியம் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் வேலை வாய்ப்பகங்களில் பதிவு செய்து வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்கள், நடுத்தர வயதினர்களின் எண்ணிக்கை 67 லட்சத்து 76 ஆயிரமாக உள்ளது என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இதில் பட்டதாரி மற்றும் வயது குறைந்த இளைஞர்களின் எண்ணிக்கை சுமார் 12 லட்சம்.

சுமார் ஒன்றரை லட்சம் மாற்றுத் திறனாளிகள் வேலைக்குவிண்ணப்பித்துக் காத்திருக்கின்றனர். இதற்கு முக்கிய காரணம் முந்தைய அதிமுக அரசுதான்.

மாநில அரசுக்கு சுமார் 5 லட்சம் கோடி கடன். அதில் பெரும் பகுதி பழைய கடனுக்கு கட்ட வேண்டிய வட்டித் தொகைக்காகவே புதிய கடன் என்ற விசித்திரமான ‘நிதிமேலாண்மை’ நிர்வாகம். இந்நிலையில், ஓய்வு பெற்று செல்லும் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியத் தொகை, பென்ஷன் உடனடியாக வழங்க இயலாததால், அவர்களை பதவியில் நீடிக்கச் செய்யும் ‘உத்தி’யாகத்தான் 58 என்ற ஓய்வு வயதை 60 ஆக ஆக்கினார்கள்.

கடினமான நிதி நெருக்கடியிலும் தேர்தல் வாக்குறுதிகளை முதல்வர்நிறைவேற்றி வருகிறார். இதில்தெளிவான கொள்கை முடிவாக,ஓய்வு வயது 60 ஆக உயர்த்தியதை,மீண்டும் 58 ஆக குறைக்க வேண்டும்.

மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட பலருக்கும் வேலை வாய்ப்புகளை உருவாக்க குறுகிய காலத்தில் 29 ஆயிரம் கோடி முதலீடுகளைசிறப்பாக தொழில் துறையில் ஈர்த்துள்ளதை தொடர வேண்டும். வேலைவாய்ப்புகள் பெருகி, இளைஞர்கள் துயர் நீங்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT