திருநின்றவூர் ரயில் நிலையத்தில் அமைச்சர் சா.மு.நாசர் ஆய்வு மேற்கொண்டார். 
தமிழகம்

திருநின்றவூர் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படும்: பால்வளத் துறை அமைச்சர் தகவல்

செய்திப்பிரிவு

திருநின்றவூர் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும் என அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர் ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி, திருநின்றவூர் ரயில் பயணிகள் பொதுநலச் சங்கத்தின் சார்பில், தலைவர் எஸ்.முருகையன் தலைமையில் நிர்வாகிகள் பால்வளத் துறை அமைச்சர் நாசரிடம் கோரிக்கை மனு அளித்தனர். இதையடுத்து, அமைச்சர் திருநின்றவூர் ரயில் நிலையத்தில் ஆய்வு செய்தார்.

பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

திருநின்றவூர் ரயில் நிலையத்தில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு மின்சார ரயில்களை இயக்கவேண்டும். தென்மாவட்டங்களுக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காக, காலை, மாலை வேளைகளில் திருவள்ளூரில் இருந்து தாம்பரத்துக்கு நேரடி ரயில் போக்குவரத்தை இயக்க வேண்டும்.

திருநின்றவூரில் விரைவு ரயில்கள் நின்று செல்ல வேண்டும். திருநின்றவூர் ரயில் நிலையத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். அரக்கோணம்-சேலம் விரைவு ரயில் ஆவடியில் இருந்து இயக்கப்பட்டு, திருநின்றவூர், திருவள்ளூர் ரயில் நிலையங்களில் நின்று செல்ல வேண்டும்.

திருநின்றவூரில் இருந்து நெமிலிச்சேரி புறவழிச் சாலையாக தாம்பரத்துக்கு பேருந்து போக்குவரத்து சேவைகளை இயக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ரயில் பயணிகள் சங்கம் சார்பில் விடுக்கப்பட்டுள்ளது.

இந்தக் கோரிக்கைகள் குறித்து ரயில்வே மற்றும் போக்குவரத்துத் துறை அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு நாசர் கூறினார்.

இந்த ஆய்வின்போது, ரயில் பயணிகள் சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT