வாழை மரக்கழிவுகளை மறுசுழற்சி செய்வதற்கான நவீனஇயந்திரம் கல்லூரி மாணவர்கள் பங்களிப்பில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.
வாழை மரத்தின் கழிவுகளை மறுசுழற்சி செய்து பயன்படுத்துவதற்கான அதிநவீன தானியங்கி இயந்திரத்தை விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை வழிகாட்டுதலில், காஞ்சிபுரம் ஐஐஐடி ஆசிரியர்கள், மாணவர்கள் குழு வடிவமைத்துள்ளது. இதன் செயல் விளக்கக் கூட்டம்தேசிய வடிவமைப்பு மற்றும்ஆய்வுமன்றம் சார்பில் ‘கழிவுகளை வளமாக்குவோம்’ என்ற தலைப்பில் இணையவழியில் நேற்று நடைபெற்றது.
இதில், ஐஐஐடியின் உதவிப்பேராசிரியர் ரகுராமன் முனுசாமி பேசியதாவது: நம் நாட்டில்வாழை அறுவடை செய்தபின்னர், 80 மில்லியன் டன்அளவுக்கு கழிவுகள் கிடைக்கின்றன. இவற்றிலிருந்து நார், பட்டை, சாறு, தண்டை பிரித்தெடுக்க முடியும்.
வாழைப்பட்டை கழிவுகள்மற்றும் அதன் நீர் விவசாயத்துக்கு சிறந்த உரமாக அமையும். மரக்கழிவுகளைப் பிரித்தெடுப்பதற்கான நவீன இயந்திரங்களும் இல்லாத சூழல்நிலவியது. இதை சரிசெய்யும் பொருட்டு, ஒருங்கிணைந்த நவீன தானியங்கி பிரித்தெடுப்பு இயந்திரம் தற்போது தயாரிக்கப்பட்டுள்ளது. வாழை மரத்தை இந்த இயந்திரத்தில் செலுத்தினால், பட்டை, சாறு, தண்டு, நார், கழிவுநீர் என தனித்தனியாக விரைவாகப் பிரித்தெடுக்கும்.
இந்தப் பணிகளை தன்னிச்சையாகவே இயந்திரம் மேற்கொள்ளும். இதன்மூலம் கழிவுகளில் இருந்து தினமும் 3 டன்னுக்கு மேலாக நார் பிரித்தெடுக்க முடியும். இயந்திரத்துக்கான செலவு ரூ.40முதல் ரூ.45 லட்சம் வரையாகும். உதவிப் பேராசிரியர்கள் சிவ பிரசாத், கல்பனா, 6 மாணவர்களின் பங்களிப்பில் இயந்திர வடிவமைப்பு பணிகள் நடைபெற்றன என்றார்.
தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மன்றத் துணைத்தலைவரான விஞ்ஞானிமயில்சாமி அண்ணாதுரைபேசியது: மரக்கழிவுகளை முறையாகப் பிரித்தெடுத்து, அவற்றை உப பொருட்களாக தயாரித்து விற்பனை செய்தால் ஆண்டுக்கு ரூ.2,000 கோடிக்கும் மேல் வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது. மேலும், ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும்.
மும்பை ஜென்கிரஸ்ட் தொழிற்சாலை, தேசிய வாழைஆராய்ச்சி மையம் ஆகியவற்றுடன் இணைந்து, ஒருங்கிணைந்த அதிநவீன இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர, மரக்கழிவுகளை கொள்முதல் செய்வதில் நிலவும் சிரமங்களைத்தவிர்க்க, செல்போன் செயலியும் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த செயலியை விவசாயிகள் பதிவிறக்கம் செய்து, உரிய விவரங்களைப் பதிவுசெய்தால் நேரடியாக கொள்முதல் செய்யப்படும்.
இந்த விவரங்களை தமிழக அரசிடம் தெரிவித்தபோது, ஆய்வு மையம் அமைக்க 5 ஏக்கர் வரை நிலம் வழங்கமுன்வந்துள்ளது. அதேநேரம்,ஆராய்ச்சிப் பணிகளுக்கு 10 ஏக்கர் வரையும், ஆய்வு மையத்துடன் தொழிற்சாலை அமைக்க 50 ஏக்கர் வரையும் இடம் தேவைப்படும் என்று அரசிடம் தெரிவித்துள்ளோம் என்றார்.
இந்நிகழ்வில், டிஆர்டிஓ விஞ்ஞானி வி.டில்லி பாபு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.