திருக்கோவிலூர் வட்டத்திற் குட்பட்ட சடைக்கட்டி, விளந்தை,வு.அத்திப்பாக்கம், மணம் பூண்டி,நெடுங்கம்பட்டு, கொழுந்திராம் பட்டு, சொரை யப்பட்டு, கழுமரம் மற்றும் குலதீபமங்கலம் ஆகிய கிராமங்களில் உங்கள் தொகுதியில் முதல்வர் திட்ட துறையின் கீழ் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி நேற்று பெற்றுக் கொண்டார்.
நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், விக்கிரவாண்டி சட்டப்பேரவை உறுப்பினர் ந.புகழேந்தி ஆகியோர் தலைமை வகித்தனர்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் பொன்முடி பேசுகையில், “உங்களைத் தேடி நாங்கள் வருகிறோம். அரசு அலுவலகங்களுக்கு மக்கள் சென்று மனு அளித்த சூழல் மாறி, தற்போது கிராமங்களுக்கே சென்று மக்களிடம் மனுக்களை பெற்று பணிகள் நடந்து வருகின்றன. இங்கு பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடி தீர்வு காண தொடர்புடைய துறை அலுவலர்களுக்கு பரிந்துரை செய்யப்படும்” என்று தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் முருகண்ணன், திருக்கோவிலூர் வருவாய் கோட்டாட்சியர் கி.சாய்வர்தினி மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.