பாம்பன் ரயில் தூக்குப் பாலத்தில் மோதிய பார்ஜர் கப்பல், விசைப் படகு. 
தமிழகம்

பாம்பன் ரயில் பாலத்தில் பார்ஜர் கப்பல் மோதல்: விசைப்படகும் மோதியதால் அதிர்ச்சி

செய்திப்பிரிவு

பாம்பன் ரயில் பாலத்தின் மையப் பகுதியில் பார்ஜர் கப்பலும், விசைப்படகும் மோதியது,

பாம்பன் ரயில் பாலத்தில் பராமரிப்பு பணிகளுக்காக ரயில் போக்குவரத்து முற்றி லும் நிறுத்தப்பட்டுள்ளது. ரயில்கள் மண்டபம் மற்றும் ராமநாதபுரத்தில் இருந்து இயக் கப்படுகின்றன.

பாம்பன் ரயில் பாலத்தின் மத்தியப் பகுதியில் தூக்குப் பாலம் அமைந்துள்ளது. வடபகுதியில் உள்ள பாக் ஜலசந்தி கடல் பகுதியில் இருந்தும், தெற்கே உள்ள மன்னார் வளைகுடா செல்லும் கப்பல்களும் தூக்குப் பாலத்தைக் கடந்துதான் செல்ல வேண்டும்.

இந்நிலையில் பாம்பன் கடலில் நடைபெறும் புதிய ரயில் பாலம் கட்டும் பணிக்காக கேரளாவில் உள்ள விழிஞ்சியத்தில் இருந்து ஒரு பார்ஜர் கப்பல் வந்துள்ளது. இது பாம்பன் பாலத்தை கடந்து செல்வதற்காக, ரயில் பாலம் பராமரிப்பு அதிகாரிகள் தூக்குப் பாலத்தைத் திறக்க நேற்று பிற்பகலில் அனுமதி அளித்தனர்.

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் இருந்து பார்ஜர் கப்பல் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே காற்றின் வேகத்தால் ஒரு நாட்டுப் படகை உரசிக் கொண்டே வந்தது.

தொடர்ந்து பாம்பன் ரயில் தூக்குப் பாலத்தை கடக்கும் போது கிழக்குப் பகுதியில் உள்ள தூணில் மோதி பலத்த சப்தத்துடன் சென்றது. தொடர்ந்து வந்த விசைப்படகின் கம்பம் தூக்குப் பாலத்தில் மோதி சேதமடைந்தது.

இது குறித்து ரயில்வே ஊழியர்கள் கூறும்போது, இந்த விபத்தால் தூக்குப் பாலம் சேதமடைந்திருக்குமா என்பது குறித்து முழுமையாக சென்சார் சோதனை செய்த பிறகே தெரியும் என்றனர்.

SCROLL FOR NEXT