ஹீமோபிலியா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான கரோனா தடுப்பூசி முகாமை பார்வையிட்ட கோவை அரசு மருத்துவமனையின் டீன் நிர்மலா உள்ளிட்டோர். 
தமிழகம்

கோவையில் ஹீமோபிலியா பாதித்தவர்களுக்கு கரோனா தடுப்பூசி முகாம்: 2 நாட்களில் 127 பேர் பயன்

க.சக்திவேல்

கோவை அரசு மருத்துவமனை, ஹீமோபிலியா சொசைட்டி கோவை கிளை ஆகியவை இணைந்து தமிழகத்தில் முதல்முறையாக ஹீமோபிலியா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான கரோனா தடுப்பூசி முகாமை ஏற்பாடு செய்துள்ளன.

இது தொடர்பாக, மருத்துவமனையின் டீன் நிர்மலா கூறியதாவது:

"ஹீமோபிலியா என்பது மரபணு வழியாக வரக்கூடிய ஒரு நோயாகும். இக்குறைபாடு உள்ளவர்களின் உடலில் காயம் ஏற்பட்டால் ரத்தம் உறையாமல் தொடர்ந்து வெளியேறும். உரிய சிகிச்சை இல்லாவிட்டால் உயிருக்கு ஆபத்து ஏற்படும். மரபு வழி நோயான இது ஆண்களை மட்டுமே பாதிக்கிறது.

கோவை மாவட்டத்தை சுற்றியுள்ள பகுதிகளில் ஹீமோபிலியாவால் பாதிக்கப்பட்ட 350 பேர் உள்ளனர். அதில், 250 பேர் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆவர். முகாமில் தடுப்பூசி செலுத்தும்போது அவர்களுக்கு ரத்தக்கசிவு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் என்பதால், அதனைத் தடுக்க ரத்தம் உறையும் காரணி (Clotting factor) செலுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது. அதன் பிறகு, கோவாக்சின் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

முதல்கட்டமாக நோயாளிகள் மற்றும் அவர்களை கவனிப்பவர்கள் என மொத்தம் 127 பேருக்கு நேற்றும், நேற்று முன்தினமும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. எஞ்சியுள்ளவர்களுக்கு வரும் 26, 27-ம் தேதிகளில் முகாம் நடைபெறும். தமிழகத்தில் முதல்முறையாக இந்த முகாம் கோவை அரசு மருத்துவமனையில் நடைபெற்றுள்ளது".

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்வில், ஹீமோபிலியோ நோடல் அதிகாரிகள் மங்கையற்கரசி, கீதாஞ்சலி, குழந்தைகள் நலப்பிரிவு துறை தலைவர் பூமா, சமூக சேகவர் நிகில் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT