கடந்த 2014-15 ஆண்டுக்கான வருமான வரி கணக்கை மறுமதிப்பீடு செய்து பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவை எதிர்த்து கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்துள்ள மனுவுக்கு, வருமான வரித் துறையினர் பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிவகங்கை தொகுதி எம்.பி. கார்த்தி சிதம்பரம், கடந்த 2015-ம் ஆண்டு சென்னை முட்டுக்காடு பகுதியில் தங்களுக்குச் சொந்தமான சொத்துகளை அக்னி எஸ்டேட்ஸ் ஃபவுண்டேஷன் என்ற நிறுவனத்துக்கு விற்பனை செய்துள்ளார். இதன்மூலம் பெற்ற தொகை ரூ.6.38 கோடிக்கு முறையாக வருமானவரி கட்டவில்லை எனக் கூறி கடந்த 2014-15 மற்றும் 2015-16 ஆண்டுகளுக்கான வருமான வரி கணக்கை மறுமதிப்பீடு செய்வது குறித்து கார்த்திசிதம்பரம் மற்றும் அவரது மனைவி நிதி ஆகியோருக்கு வருமான வரித் துறை நோட்டீஸ் பிறப்பித்தது.
இந்த நோட்டீஸை ரத்து செய்யக் கோரி கார்த்தி சிதம்பரம் மற்றும் நிதி ஆகியோர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம், போதுமான காலஅவகாசம் அளித்து நோட்டீஸ் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு இருந்தது.
இதை எதிர்த்து கார்த்தி சிதம்பரம் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த 2014-15ஆண்டுக்கான வருமான வரி கணக்கை மறு மதிப்பீடு செய்துரூ.3.86 கோடி வரி செலுத்த வேண்டும் எனக் கூறி வருமான வரித் துறை ஜூலை 15-ம் தேதிமீண்டும் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.
இதை எதிர்த்து கார்த்தி சிதம்பரம், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில்,தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு நிலுவையில் உள்ள நிலையில், வருமான வரித் துறை ரூ.3.86 கோடி வரி செலுத்தக் கோரி நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. தங்களது தரப்பில் விளக்கம் அளிக்க போதிய அவகாசம் தரப்படவில்லை என அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதுதொடர்பாக வருமான வரித்துறையினர் பதில் அளிக்க உத்தரவிட்ட நீதிபதி ஆர்.மகாதேவன்,விசாரணையை ஜூலை 28-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.