தமிழகம்

கோவையில் இடிக்கப்பட்ட கோயிலுக்கு பால் குடத்துடன் ஊர்வலமாக சென்ற பெண்கள் கைது

செய்திப்பிரிவு

கோவையில் இடிக்கப்பட்ட கோயிலுக்கு பால் குடம் எடுத்துக் கொண்டு ஊர்வலமாக வந்த பெண்களை போலீஸார் கைது செய்தனர்.

கோவை மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ், குளக் கரைகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. இதையொட்டி, ஆர்எஸ்புரம் தடாகம் சாலை முத்தண்ணன் குளக்கரையோரம் வசித்துவந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு மாற்று இடம் வழங்கப்பட்டது. அவர்கள் வீடுகளை காலி செய்ததை தொடர்ந்து, மாநகராட்சி நிர்வாகத்தினர் சமீபத்தில் அந்த வீடுகளை இடித்து அகற்றினர்.

அப்பகுதியில் இருந்த அங்காள பரமேஸ்வரியம்மன் கோயில் உட்பட 9 கோயில்களும் இடிக்கப்பட்டு சாமி சிலைகள் அதிகாரிகளால் பத்திரப்படுத்தப்பட்டன. கோயில்களை இடித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.

அகற்றப்பட்ட அங்காள பரமேஸ்வரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் சிறப்பு பூஜைகள் நடப்பது வழக்கம். அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் பால் குடம் எடுத்துவருவர். இந்நிலையில், ஆடி முதல் வெள்ளிக்கிழமையான நேற்று, வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்த பெண்கள் உட்பட ஏராளமானோர் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் தலைமையில் பூசாரிபாளையம் பகுதியில் இருந்து பால் குடம் எடுத்து, கோயில் இருந்த இடத்தை நோக்கி ஊர்வலமாக வந்தனர். அனுமதியின்றி ஊர்வலம் செல்லக்கூடாது என ஆர்.எஸ்.புரம் போலீஸார் தெரிவித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலையில் அமர்ந்து பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, 78 பேரை போலீஸார் கைது செய்தனர்.

இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

SCROLL FOR NEXT