திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு அருகே உள்ள அம்மையார்குப்பத்தைச் சேர்ந்தவர் வேதாச்சலம்(26). கல்லூரிப் படிப்பை முடித்த இவர் வேலை தேடி வந்தநிலையில், முகநூல் பக்கம் ஒன்றில்,சென்னை - கே.கே.நகர் இ.எஸ்.ஐமருத்துவமனையில் பணிக்கு ஆட்கள் தேவை என்ற விளம்பரத்தை பார்த்து, அதில் உள்ள செல்போன்எண்ணைத் தொடர்பு கொண்டுள்ளார்.
அந்த எண்ணில் பேசிய சென்னை, மேடவாக்கத்தைச் சேர்ந்த பாலாஜி( 36), இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் வேலைக்கு சேர ரூ.60 ஆயிரம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, வேதாச்சலம், பாலாஜியின் பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு கூகுள் பே மூலம் ரூ.54,350 செலுத்தியுள்ளார். தொடர்ந்து, வேதாச்சலத்தின்மின்னஞ்சல் முகவரிக்கு மருத்துவமனை பணிக்கான நியமன ஆணையை பாலாஜி அனுப்பியுள்ளார்.
அந்த ஆணையுடன் கே.கே.நகர் இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்குச் சென்ற வேதாச்சலத்துக்கு, அந்த நியமன ஆணை போலி என்பது தெரியவந்தது.
இதுகுறித்து, நேற்று முன்தினம் வேதாச்சலம், திருவள்ளூர் எஸ்.பி. வருண்குமாரிடம் புகார் அளித்தார். அப்புகாரின் பேரில் திருவள்ளூர் மாவட்ட சைபர் கிரைம் போலீஸார் விசாரணை நடத்தினர்.
அவ்விசாரணையின் அடிப்படையில் பாலாஜியை நேற்று திருவள்ளூர் மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் லில்லி தலைமையில், சைபர் கிரைம் உதவி ஆய்வாளர் மனோஜ் பிரபாகர் தாஸ் உள்ளிட்டவர்கள் அடங்கிய சைபர் கிரைம் போலீஸார் கைது செய்து, அவரிடம் இருந்து போலி முத்திரை, போலி பணி நியமன ஆணைகள், செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட பாலாஜியிடம் நடத்திய விசாரணையில், சமூக வலைதளம் மூலம் விளம்பரம் செய்து, வேதாச்சலம் உட்பட 73 பேரிடம் வேலை வாங்கித் தருவதாகவும் கூறி, பல லட்சம் ரூபாய் மோசடி செய்தது தெரிய வந்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.