ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள தனியார் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் சார்ந்த படிப்பு படித்து வந்த மாணவி ஒருவர் 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள தண்டலம் பகுதியில் தனியார் நிகர்நிலை பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. இங்கு மாணவ, மாணவிகள் பல்வேறு வகையான மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகளை பயின்று வருகின்றனர்.
இந்தக் கல்லூரியில் அம்பத்தூர் புதூர் பகுதியைச் சேர்ந்த ராஜி என்பவரின் மகள் சோனாலி(20), பி.எஸ்சி. சுகாதார அறிவியல் படிப்பை படித்து வந்தார். முதல் செமஸ்டர் தேர்வு நடைபெற்றுள்ளது. சோனாலி தேர்வு அறையில் செல்போன் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதனால் சோனாலியை தேர்வு அறையில் இருந்து தேர்வு கண்காணிப்பாளர் வெளியேற்றியதாக கூறப்படுகிறது.
பின்னர், தேர்வு எழுதிய 7-வது மாடியில் இருந்து 3-வது மாடிக்கு வந்த சோனாலி அங்கிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துக் கொண்டார். இதில் தலை மற்றும் உடலில் பலத்த காயமுற்ற சோனாலி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பெரும்புதூர் போலீஸார் சோனாலியின் உடலை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.