சமூக அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பேசுபவர்கள் எந்த மதத்தினராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்துள்ளார்.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு திருத்தி அமைக்கப்பட்ட மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் முதல் கூட்டம், அதன் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தலைமையில் சென்னையில் நேற்று நடந்தது. சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், ஆணையத்தின் துணைத் தலைவர் டாக்டர் மஸ்தான், உறுப்பினர்கள் தமீம்அன்சாரி, ஹர்பஜன்சிங் சூரி, மன்ஜித் சிங் நய்யார், பைரேலால் ஜெயின், எல்.டான் பாஸ்கோ, டாக்டர் எம்.இருதயம், மவுரியார் புத்தா பங்கேற்றனர்.
கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களிடம் பீட்டர் அல்போன்ஸ் கூறியதாவது:
சட்டப்பேரவைத் தேர்தலில் வென்றுஆட்சி அமைத்துள்ள முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டும், சிறுபான்மையினர் ஆணையத்தை சீரமைத்த முதல்வருக்கு நன்றியும் தெரிவிக்கப்பட்டது.
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவருக்கு வழங்கப்பட்டுள்ள 7.5 சதவீத ஒதுக்கீட்டை 10 சதவீதமாக அதிகரித்து, அரசு உதவி பெறும் பள்ளி மாணவருக்கும் விரிவுபடுத்த வேண்டும்.
கிறிஸ்தவ வன்னியர்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும். விதிகளுக்கு உட்பட்டு அமைக்கப்படும் சிறுபான்மை மதங்களின் வழிபாட்டுத் தலங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும். சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்கள் சிறுபான்மையினர் நலனுக்காக செயல்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். சிறுபான்மையினர் நலனுக்காக பாடுபட்ட கருணாநிதிக்கு பாரத ரத்னா விருதுவழங்க வேண்டும் ஆகிய 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
எந்த மதத்தினராக இருந்தாலும்..
கன்னியாகுமரி மாவட்ட பாதிரியார் ஒருவர் பேசியது சமூக ஊடகங்களில்பரவி வருகிறது. சமூக அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பேசுபவர்கள் எந்த மதத்தினராக இருந்தாலும்கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,மக்களின் ஒற்றுமையை சீர்குலைப்பவர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்பதே ஆணையத்தின் நிலைப்பாடு.
இவ்வாறு அவர் கூறினார்.