மறைந்த ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஜெயந்தி விழா ஜூலை 26-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பங்கேற்கிறார்.
இதுகுறித்து சங்கர மடத்தின் மேலாளர் சுந்தரேச அய்யர் கூறியது:
காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 69-வதுபீடாதிபதியாக இருந்த ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 87-வது ஜெயந்திவிழா ஜூலை 26-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவை முன்னிட்டு காஞ்சிபுரம் சங்கர மடத்திலும், ஓரிக்கையில் அமைந்துள்ள மகா பெரியவர் சதாப்தி மணி மண்டபத்திலும் காலையில்ஏகாதசி ருத்ர ஜெபம், வேத பாராயணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. ஓரிக்கையில் உள்ள மகா பெரியவர் மணி மண்டபத்தில் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பாதுகைக்கு தங்க நாணயங்களால் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பாத பூஜை செய்கிறார்.
இதைத் தொடர்ந்து ஆந்திர முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் வெங்கடேச சவுத்ரி எழுதிய ‘வியட்நாம், கம்போடியா தேசங்களில் இந்து கோயில்கள்’ என்ற தெலுங்கு நூல் வெளியிடப்படுகிறது. இதை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வெளியிடுகிறார். இதைத் தொடர்ந்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படுகின்றன. இதையடுத்து சங்கர மடத்தின் மடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளும், தமிழக ஆளுநர் பன்வாரிலார் புரோஹித்தும் சிறப்புரை நிகழ்த்துகின்றனர். இதில் சங்கர மடத்தின் பக்தர்கள் பங்கேற்க உள்ளனர்.