பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு பாலிடெக்னிக் கல்லூரி ஆசிரியர்கள் சென்னையில் நேற்று உண்ணாவிரதம் இருந்தனர்.
தமிழ்நாடு அரசு பாலிடெக்னிக் கல்லூரி ஆசிரியர் சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு அந்த அமைப்பின் மாநிலத் தலைவர் எஸ்.முருகநாதன் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் பி.தினகரன் முன்னிலை வகித்தார். மாநில பொருளாளர் கே.முத்துகுமார், இணைச் செயலாளர்கள் செல்வகுமார், குமரேசன், வேலூர் மாவட்ட செயலாளர் ராஜேஷ் உள்ளிட்டோர் பேசினர்.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உபரியாகவுள்ள பொறியியல் பேராசிரியர்களை அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு இடமாற்றம் செய்தால் ஏற்கெனவே இங்கு பணியாற்றி வரும் ஆசிரியர்களின் பதவி உயர்வுக்கும், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் விரிவுரையாளர் நேரடி தேர்வுக்குத் தயாராகிக் கொண்டிருக்கும் இளைஞர்களுக்கும் அது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று போராட்டத்தில் பேசியவர்கள் குறிப்பிட்டனர்.