அரசு மற்றும் தனியார் பேருந்து களில் கூடுதல் எண்ணிக்கையில் பயணிகளை ஏற்றிச் செல்வதால் கரோனா தொற்று பரவல் அதிகரிக் கும் என சுகாதாரத் துறையினர் எச்சரித்துள்ளனர்.
கரோனா ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் பேருந்துகள், 50 சதவீத பயணிகளுடன் இயக்கலாம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஆனால், அவரது அறிவிப்பு காற்றில் பறக்க விடப்பட்டுள்ளது. அனைத்து அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் பயணிகளின் கூட்டம் வழக்கம் போல் உள்ளது.
இது குறித்து சுகாதாரத் துறையினர் கூறும்போது, “கரோனா தொற்று பரவல் முடிவுக்கு வந்துவிட வில்லை. மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக, ஊரடங்கில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தளர்வுகளை அறிவித்து வருகிறார். 50 சதவீத பயணிகளுடன் அரசு மற்றும் தனியார் பேருந்துகளை இயக்க உத்தரவிட்டுள்ளார். ஆனால், அனைத்து பேருந்துகளிலும் மக்கள் கூட்டம் அதிகம் உள்ளது.
பேருந்துகளில் சமூக இடைவெளியை பின்பற்றவில்லை. 25 சதவீதம் பேர் முகக்கவசம் அணிவது கிடையாது. முகக்கவசம் அணிந்துள்ளவர்களில் பலரும், ஓட்டுநர் மற்றும் நடத்துநர் உட்பட, தங்களது வாய் பகுதி அல்லது தாடை பகுதியில் போட்டுக் கொண்டு பயணிப்பதை காண முடிகிறது. 50 சதவீத பயணிகளுடன் இயக்க வேண்டும் என்ற உத்தரவு இருந்தாலும், கூடுதல் எண்ணிக் கையில் பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டாம் என உயர் அதிகாரிகள் உத்தரவிடவில்லை என நடத்துநர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
மேலும், பெண்களுக்கு இலவச பயணம் என்ற உத்தரவால், நகரப் பேருந்துகளிலும் மக்கள் கூட்டம் அதிகம் காணமுடிகிறது. நீண்ட தூரம் செல்லும் வழித்தட பேருந்து களைவிட, நகரப் பேருந்துகளில் உள்ள படிக்கட்டுகளில் தொற்றிக்கொண்டு மக்கள் பயணம் செய் கின்றனர்.
டீசல் விலை உயர்வை காரணமாக கூறி, பேருந்துகளை நிரப்பிக் கொண்டு செல்வது தொற்று பரவலுக்கு வழி வகுக்கும். ‘பீக் ஹவர்ஸ்’ என சொல்லப்படும் பரபரப்பான நேரங்களில் கூடுதல் எண்ணிக்கையில் பேருந்துகள் இயக்கப்பட வேண்டும். இதற்கு தீர்வு காண மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்” என்றனர்.