மதுரை துணைக்கோள் நகரம் உச்சப்பட்டி தோப்பூரில் இருந்து அவனியாபுரம் வெள்ளக்கல் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கழிவுநீரினை கொண்டு செல்வதற்காக புதிதாக கழிவுநீர் உறிஞ்சு கிணறுகள் மற்றும் குழாய்கள் பதிக்கப்பட்டு வரும் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் கே.பி.கார்த்திகேயன் இன்று ஆய்வு மேற்கொண்டார்.
மதுரை துணைக்கோள் நகரமான உச்சப்பட்டி தோப்பூரில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் சார்பில் பல்வேறு நவீன குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகிறது.
விரைவில் இப்பகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப்பணி தொடங்க இருக்கிறது. அதனால், தமிழக அரசின் அறிவுறுத்தலின் பேரில் மாநகராட்சி நிர்வாகம் தொலைநோக்கு பார்வையுடன் இப்பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீரினை அவனியாபுரம் வெள்ளக்கல்லில் செயல்பட்டு வரும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்வதற்கு திட்டம் தயார் செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
முதற்கட்டமாக தற்போது தோப்பூர் வீட்டு வசதிவாரியம் குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுகளை மட்டுமே அவனியாபுரம் வெள்ளக்கல் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்ல உள்ளது.
தோப்பூரில் இருந்து அவனியாபுரம் வெள்ளக்கல் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்வதற்காக தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் பங்களிப்புடன் ரூ.17.90 கோடி மதிப்பீட்டில் புதிதாக குழாய்கள் பதிக்கும் பணிகள் மூன்று சிப்பங்களாக பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது.
இப்பணிகளை மாநகராட்சி ஆணையாளர் கார்த்திகேயன் ஆய்வு மேற்கொண்டு நடைபெற்றுவரும் பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் விரைந்து முடிக்குமாறும் சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்டார்.