குளிர் காலத்திலும் பூத்துக்குலுங்கும் மல்லிகை ரகமான தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் Co-1 ரக ஸ்டார் மல்லிகை மதுரை மாவட்டத்தில் தற்போது அறிமுகப்படுத்தப்படுகிறது.
அதனை விவசாயிகள் சாகுபடி செய்ய முன்வர வேண்டும் என மதுரை தோட்டக்கலை துணை இயக்குநர் ரேவதி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மதுரை தோட்டக்கலை துணை இயக்குநர் ரேவதி மேலும் கூறியதாவது:
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் Co-1 ரக ஸ்டார் மல்லிகையை Co-1 ரக ஸ்டார் மல்லிகையானது நீண்ட காம்புடன் தடித்த இளஞ்சிவப்பு நிற மொட்டுகளையுடையது.
வருடம் முழுவதும் பூக்கும் தன்மையுடையது. எக்டருக்கு 7.50 டன்கள் வரை மகசூல் கிடைக்கும். இந்த ரகப் பூ மலர்ந்தவுடன் நட்சத்திர வடிவத்தில் வெள்ளை நிறத்தில், நல்ல மணம் வீசக்கூடியது. இதர மல்லிகை ரகங்களின் வரத்து குறைவாக இருக்கும் குளிர் காலங்களிலும் பூத்துக்குலுங்கும் தன்மையுடையது ஸ்டார் மல்லிகை.
ஆண்டு முழுவதும் பூத்துக்குலுங்கும் என்பதால் இந்த ரகத்தினை விவசாயிகள் சாகுபடி செய்ய முன்வர வேண்டும். தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் இந்த ஸ்டார் மல்லிகை Co-1 ரக சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.16 ஆயிரம் மானியம் வழங்கப்படும். அரசு இதற்காக மதுரை மாவட்டத்திற்கு ரூ.1.60 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
தற்போது மல்லிகை நடவுக்கான பருவம் என்பதால் 2021-22ம் நிதியாண்டில் தோட்டக்கலை இயக்கத் திட்டத்தின்கீழ் எக்டருக்கு அதிகபட்சமாக ரூ.16 ஆயிரம் மதிப்பில் சிறு, குறு விவசாயிகளுக்கு 40 சதவீத மானியத்திலும் இதர விவசாயிகளுக்கு 25 சதவீத மானியத்திலும் நடவுப்பொருட்கள் வழங்கப்படவுள்ளது.
இந்த நடவுப்பொருட்கள் மதுரை மேலூர் அருகே பூஞ்சுத்தியிலிருக்கும் அரசு தோட்டக்கலைப்பண்ணையிலிருந்து விநியோகிக்கப்படும். விவசாயிகள் விரைவில் அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர்களை அணுகி பயன் பெறலாம். இதற்காக அரசு நடப்பு நிதியாண்டிற்கு ரூ.6.40 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.