அரசு ராஜாஜி மருத்துவமனையில் அதிகமான மக்கள் வரும் நிலையில் ஒதுக்கப்படும் தடுப்பூசி போதுமானதாக இல்லாமல் தீர்ந்து போகிறது. மாவட்ட ஆட்சியர், கூடுதல் தடுப்பூசிகள் வழங்குவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கிராமங்களில் போதிய விழிப்புணர்வு இல்லாததால் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தினமும் வழங்கப்படும் தடுப்பூசிகள் தீர்ந்து போகாமல் கையிருப்பு 17 ஆயிரத்துக்கு மேல் உள்ள நிலையில், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கும் ஆரம்ப சுகாதார நிலையங்களைப் போல் தடுப்பூசிகளை விநியோகம் செய்வதால் அவை உடனுக்குடன் தீர்ந்துபோய் தற்போது வெறும் 10 தடுப்பூசிகள் மட்டுமே கையிருப்பில் உள்ளன.
மதுரை மாவட்டத்தில் இதுவரை 51,922 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 690 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது அனைவருமே குணமடைந்து வீடு திரும்புகின்றனர். தற்போது பாதிக்கப்படுவோரில் இறப்போர் எண்ணிக்கை முற்றிலும் குறைந்துள்ளது. ஆனால், தொற்று இன்னும் முற்றிலும் குறையவில்லை.
அதனால், இந்த நோயை முற்றிலும் கட்டுப்படுத்த தமிழக அரசு மாநிலம் முழுவதுமே தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்தியுள்ளது. ஆனால், தடுப்பூசி பற்றாக்குறையால் மக்கள் சிரமம் அடைந்துள்ளனர்.
மதுரை மாவட்டத்தில் இதுவரை 7 லட்சத்து 2,789 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். தற்போது மாவட்டத்தில் மொத்தம் 17,740 தடுப்பூசிகள் இருப்பு உள்ளதாக சுகாதாரத்துறை கூறியுள்ளது. ஆனால், அரசு ராஜாஜி மருத்துவமனையில் வெறும் 10 தடுப்பூசிகள் மட்டுமே இருப்பு உள்ளதாகக் கூறியுள்ளனர்.
அதே நேரத்தில், புறநகர் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 17,110 தடுப்பூசிகள் இருப்பு உள்ளது. மாவட்ட சுகாதாரக் கிடங்குக்கு வரும் தடுப்பூசிகள், அரசு ராஜாஜி மருத்துவமனை, மற்ற அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தினமும் 200 தடுப்பூசிகள் என்ற அடிப்படையில் பிரித்து விநியோகம் செய்யப்படுகிறது.
இந்த அடிப்படையில், ஒரு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ஒதுக்கும் தடுப்பூசிகளையே அரசு ராஜாஜி மருத்துமனைக்கு சுகாதாரத்துறை ஒதுக்குகிறது. அதனால், அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு வரும் தடுப்பூசிகள் உடனுக்குடன் தீர்ந்து போய்விடுகிறது. மக்களும் தினமும் வந்து தடுப்பூசி போட முடியாமல் ஏமாற்றமடைந்து செல்கின்றனர்.
மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தலின் பேரிலே அனைத்து மையங்களுக்கும் தினமும் 200 தடுப்பூசி ஒதுக்குவதாகவும் கூறப்படுகிறது. அதனாலே அரசு ராஜாஜி மருத்துவமனைக்குப் போதுமானதாக இல்லை என்று மருத்துவர்கள் ஆதங்கம் அடைந்துள்ளனர்.
கிராமங்களில் தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வு இன்னும் ஏற்படவில்லை. அதற்கான முயற்சியையும் சுகாதாரத்துறை முழுமையாக மேற்கொள்ளவில்லை. அதனால், தடுப்பூசி போட மக்கள் வராமல் தினமும் வழங்கப்படும் தடுப்பூசிகளைப் போடக் கூட ஆளில்லாமல் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கையிருப்பு எண்ணிக்கை அதிகரித்து, தற்போது 17,110 தடுப்பூசிகள் உள்ளன.
அரசு ராஜாஜி மருத்துவமனையில் அதிகமான மக்கள் வரும் நிலையில் ஒதுக்கப்படும் தடுப்பூசி போதுமானதாக இல்லாமல் தீர்ந்து போகிறது. மாவட்ட ஆட்சியர், பற்றாக்குறையைப் பொறுத்து அதிகம் தேவைப்படும் அரசு ராஜாஜி மருத்துவமனை போன்ற தடுப்பூசி மையங்களுக்கு கூடுதல் தடுப்பூசிகள் வழங்குவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.