தமிழகம்

அதிமுகவில் ஈரோடு புறநகர் மாவட்டம் இரண்டாகப் பிரிப்பு: புதிய மாவட்ட செயலாளர்களாக செங்கோட்டையன், கருப்பணன் நியமனம்

செய்திப்பிரிவு

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

அதிமுக நிர்வாக வசதியை கருத்தில்கொண்டு, ஈரோடு புறநகர் மாவட்டமாக செயல்பட்டு வரும் மாவட்ட கழக அமைப்பு, இன்று முதல் அமைப்பு ரீதியாக ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்டம், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டம் என இரண்டு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்டம் பவானி, பெருந்துறை சட்டப்பேரவை தொகுதிகளையும், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம், அந்தியூர், பவானிசாகர் (தனி) ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளையும் உள்ளடக்கியிருக்கும்.

இதன் அடிப்படையில், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளராக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், ஈரோடுபுறநகர் கிழக்கு மாவட்ட செயலாளராக முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் ஆகியோர் இன்றுமுதல் நியமிக்கப்படுகின்றனர்.

தற்போது பிரிக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு உட்பட்ட அனைத்து நிர்வாகிகளும், தொண்டர்களும் சம்பந்தப்பட்ட மாவட்டச் செயலாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து கட்சிப் பணிகளை ஆற்ற வேண்டும்.

ஈரோடு புறநகர் கிழக்கு, மேற்கு ஆகிய மாவட்டங்களுக்கு மாவட்ட அளவில் திருத்தியமைக்கப்பட்ட நிர்வாகிகள் நியமிக்கப்படும் வரைதற்போதுள்ள நிர்வாகிகள் சம்பந்தப்பட்ட மாவட்டத்துக்கு உட்பட்ட நிர்வாக பொறுப்புகளில் தொடர்ந்து செயல்படுவர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT