மதுரையில் நடக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் வரவுள்ளதாக கூறப்படுகிறது. அவரது வருகையை முன்னிட்டு மாநகராட்சி சார்பில் அதன் உதவி ஆணையர், அனைத்து மண்டல அலுவலர்களுக்கும் ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் சத்யசாய் நகரில் உள்ள சாய்பாபா கோயிலில் 22-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். அதனால் அவரது வருகையை முன்னிட்டு விமான நிலையத்தில் இருந்து அவர் கலந்து கொள்ள இருக்கும் நிகழ்ச்சிகளுக்கான இடங்களை தெரிந்து, நிகழ்ச்சிகள் நடக்கும் இடங்களுக்கான வழித்தடங்களில் உள்ள சாலைகளை சீரமைத்தல், தெரு விளக்குகளை பராமரித்தல், சாலைகளை சுத்தமாக வைத்தல் போன்ற பணிகளை செய்திட வேண்டும். அவர் பயணிக்கும் நேரங்களில் சாலைகளில் சீரமைப்பு பணிகள் எதுவும் நடைபெறாமல் பார்த்துக் கொள்ள அனைத்து மண்டல அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆர்எஸ்எஸ் இயக்கத்தையும், பாஜகவையும் அரசியல்ரீதியாக திமுக கடுமையாக எதிர்த்து வரும்நிலையில் அதன் நிர்வாகத்தின்கீழ் நடக்கும் மதுரை மாநகாட்சியில் ஆர்எஸ்எஸ் தலைவர் வருகையை முன்னிட்டு பிரதமர், முதல்வருக்கு இணையாக சிறப்பு உத்தரவு பிறப்பித்து சிறப்பு தூய்மைப் பணி, கண்காணிப்பு பணிக்கு மாநகராட்சி உதவி ஆணையர் உத்தரவிட்டிருப்பது அக்கட்சியினர் மட்டுமில்லாது கூட்டணி கட்சியினரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமூக வலைதளங்களில் ‘தமிழகத்தில் நடப்பது திமுக ஆட்சியா? என்றும், ஆர்எஸ்எஸ், பாஜக இல்லாத இந்தியாவை அமைப்போம் என்ற திமுகவின் கோஷம் எல்லாம் பொய்யா?’ என்று அந்த சுற்றறிக்கையை பகிர்ந்து பலரும் கருத்துகளை தெரிவித்து வருவதால் திமுகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் கே.பி.கார்த்திகேயனிடம் கேட்டபோது, ‘‘ஆர்எஸ்எஸ் தலைவர் உயர் பாதுகாப்பு பெற்றவர். அவரைப் போன்ற உயர் பாதுகாப்பு விஐபிகள் வரும்போது போலீஸார் அறிவுறுத்தலின்பேரில் இதுபோன்ற உத்தரவுகள் பிறப்பித்து அவர்கள் செல்லும் பகுதிகளை சுத்தமாக வைத்துக் கொள்வது குறித்து மாநகராட்சி ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்படும். அவர்கள் செல்லும் பகுதியில் போக்குவரத்துக்கு தடை ஏற்படாமல் இருக்கவே இந்த பணி மேற்கொள்ளப்படுகிறது’’ என்றார்.