ஆப்கானிஸ்தானில் கொடைக்கானல் பாதிரியார் அலெக்சிஸ் பிரேம்குமார் கல்வி, சமூக சேவை மட்டுமன்றி கிறிஸ்தவ மதப் பிரச்சாரத்திலும் ஈடுபட்டதால், தீவிரவாதிகள் அவரைக் கடத்திச் சென்றிருக்கலாம் என்று அவருக்கு நெருக்கமான பாதிரியார்கள் கூறுகின்றனர்.
ஆப்கானிஸ்தானின் ஹெராத் நகரில் கடந்த 2-ம் தேதி பள்ளி ஒன்றில் பாதிரியார் அலெக்சிஸ் பிரேம்குமார் பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த தீவிரவாதிகள் அங்கிருந்த மற்ற அனைவரையும் விட்டுவிட்டு, அலெக்சிஸ் பிரேம்குமாரை மட்டும் கடத்திச் சென்றுவிட்டனர்.
கடத்தப்பட்டு 3 நாட்களாகியும் அவர் எதற்காகக் கடத்தப்பட்டார், கடத்தல்காரர்களின் கோரிக்கை என்ன, கடத்தியது எந்தத் தீவிரவாதக் குழு, பாதிரியாரின் நிலை என்ன என்பன உள்ளிட்ட எந்தத் தகவலும் கிடைக்காமல் பாதிரியாரின் உறவினர்களும், ஊர் மக்களும், நண்பர்களும், சக பாதிரியார்களும் பதற்றத்தில் உள்ளனர்.
கிளம்பும் பல்வேறு ஊகங்கள்…
தீவிரவாதம் வேரூன்றி உள்ள, ரத்தக்கறை படிந்த ஆப்கானிஸ்தானில் ஐ.நா, செஞ்சிலுவை சங்கம் உள்ளிட்ட 15 சர்வதேச தன்னார்வ அமைப்பின் ஊழியர்கள் தங்கி, அங்குள்ள மக்களுக்கு பல்வேறு வழிகளில் சேவை செய்து வருகின்றனர். பல்வேறு சேவை அமைப்புகளின் ஊழியர்கள் அங்கிருக்கும் நிலையில், தீவிரவாதிகள் அலெக்சிஸ் பிரேம்குமாருக்கு மட்டும் குறிவைக்கக் காரணம் என்ன என்று தெரியாமல் இரு நாடுகளின் தூதரக மற்றும் வெளியுறவுத்துறை அதிகாரிகள் குழப்பம் அடைந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானுக்கும், இந்தியாவுக்கும் இடையே நல்லுறவு ஏற்படுவதைத் தடுக்கும் நோக்கில் இந்தக் கடத்தலை அரங்கேற்றியுள்ளனரா அல்லது பாதிரியார் மீது ஏதேனும் தனிப்பட்ட கோபமா என்று அவர்களுக்குப் புரியவில்லை. ஆனால், அவரது கடத்தலில் பல்வேறு ஊகங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.
கடத்தலுக்கு அச்சாரம் மதப் பிரச்சாரமா?
இதுகுறித்து அலெக்சிஸ் பிரேம்குமாருக்கு நெருக்கமான பாதிரியார்கள் கூறியதாவது:
பிரிட்டிஷார் இந்தியாவுக்கு வந்த பிறகுதான் கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் நம் மக்களுக்கு முழுமையாகக் கிடைக்கத் தொடங்கின. கல்வி, மருத்துவம், சமூகச் சேவையுடன் பிரிட்டிஷார் கிறிஸ்தவ மதப் பிரச்சாரத்திலும் ஈடுபட்டனர். அதில் ஈர்க்கப்பட்டு பலர் கிறிஸ்தவ மதத்தைத் தழுவினர். இந்த மதமாற்றம்தான் இந்தியாவில் கிறிஸ்தவ மதம் மட்டுமன்றி கிறிஸ்தவ கல்வி, மருத்துவ நிறுவனங்கள் ஆழமாக வேரூன்ற பிரதானக் காரணம்.
இந்தியாவில் பிரிட்டிஷார் செய்த பணிகளைத்தான், தீவிரவாதம் மற்றும் உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்ட நாடுகளில் பாதிரியார் அலெக்சிஸ் பிரேம்குமார் போன்ற தன்னார்வத் தொண்டர்கள் தற்போது செய்து வருகின்றனர். கல்வி மட்டுமன்றி தீவிரவாத வழியில் அந்நாட்டு இளைஞர்கள் செல்வதைத் தடுப்பதற்காக அலெக்சிஸ் பிரேம்குமார் கிறிஸ்தவ மதப் பிரச்சாரத்திலும் ஈடுபட்டு வந்தார். அவரது பிரச்சாரத்தால் ஈர்க்கப்பட்ட ஆப்கன் மக்கள் பலர் கிறிஸ்தவ மத கோட்பாடுகளை பின்பற்றத் தொடங்கினர். இதனால், ஆத்திரமடைந்த ஆப்கானிஸ்தான் இளைஞர்கள் சிலர் அலெக்சிஸ் பிரேம்குமாருக்கு பலமுறை அச்சுறுத்தல் ஏற்படுத்தினர். ஆனால், அதை எல்லாம் வழக்கமான மிரட்டலாகவே கருதி அலெக்சிஸ் பிரேம்குமார் தனது சேவையைத் தொடர்ந்தார்.
மதவாதமிக்க ஆப்கானிஸ்தானில் வேற்று மத போதனைகள் என்பது எளிதானதல்ல. அந்நாட்டு மக்களும் அதை எளிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். ஆனால், அலெக்சிஸ் பிரேம்குமாரின் தன்னலமற்ற சமூக சேவை அவருடன் அந்நாட்டு மக்களுக்கு நெருக்கத்தை ஏற்படுத்தியது. இதனால், ஆத்திரமடைந்த தீவிரவாத குழுவினர்தான் அவரைக் கடத்திச் சென்றிருக்க வாய்ப்புள்ளது.
எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி 20 ஆண்டுகளுக்கும் மேலாக சமூகப் பணியில் ஈடுபட்டு வருகிற அலெக்சிஸ் பிரேம்குமாரை மீட்க மத்திய, மாநில அரசுகள் விரைவாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றனர்.