சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் நாளை (23-ம் தேதி) ஆடித்தபசு நிகழ்ச்சிகள் அனைத்தும் கோயிலுக்குள் நடக்கின்றன. இதில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை.
சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் ஆடித்தபசு திருவிழா கடந்த 13-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. சமுதாய மண்டகப்படியில் வைத்து திருவிழா நடத்த அனுமதிக்கப்படவில்லை. அதற்குப் பதிலாக கோயில் உள்பிரகாரத்தில் திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் மண்டகப்படிதாரர்கள் 50 பேர் மட்டும் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
திருவிழாவில் 9-வது நாளான நேற்று தேரோட்டம் நடைபெற வேண்டும். ஆனால், 2-வது ஆண்டாக தேரோட்டம் நடைபெற வில்லை. கோயிலுக்குள் வைத்து, சுவாமி மற்றும் அம்பாளுக்கு அபிஷேக, அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. ஆடித்தசு திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தபசுக் காட்சி நாளை (23-ம் தேதி) நடைபெறுகிறது. வழக்கமாக ஆடித்தபசுக் காட்சி கோயிலுக்கு வெளியே தெற்கு ரத வீதியில் நடைபெறும். இதனைக் காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள்.
ஆனால், நடப்பாண்டு இந்நிகழ்ச்சிகள் அனைத்தும் கோயிலுக்குள்ளேயே நடக்கின்றன. இதன்படி, நாளை மாலை 6 மணியளவில் ரிஷப வாகனத்தில் சுவாமி எழுந்தருளி சங்கரநாராயணராக காட்சியளிக்கிறார். பின்னர், இரவு 8 மணியளவில் யானை வாகனத்தில் எழுந்தருளி சங்கரலிங்க சுவாமியாக காட்சியளிக்கிறார். அன்று முழுவதும் உள்ளூர், வெளியூர் பக்தர்கள் கோயிலுக்குள் தரிசனம் செய்ய அனுமதிக்கக் கூடாது என மண்டகப்படிதாரர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே கோயிலுக்குள் பக்தர்கள் செல்ல அனுமதி இல்லை.
ஆடித்தபசு திருவிழா தொடர்பாக, தென்காசி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கலிவரதன் நேற்று, சங்கர நாராயண சுவாமி கோயிலுக்கு வந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்.