ஜோலார்பேட்டை அருகே கோயில் கட்ட பள்ளம் தோண்டியபோது 3 அடி உயரமுள்ள முருகன் கற்சிலை கண்டெடுக்கப்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த வக்கணம்பட்டி காமராஜர் தெருவில் பழமை வாய்ந்த மாரியம்மன் கோயிலும் அதையொட்டி விநாயகர் கோயிலும் உள்ளது.
இந்நிலையில், மாரியம்மன் கோயில் மற்றும் விநாயகர் கோயிலை புதுப்பித்து, கோயிலுக்கு சொந்தமான காலி இடத்தில்கூடுதலாக சிவன் மற்றும் முருகன் கோயில் கட்டி அதற்கு குடமுழுக்கு நடத்த கிராம மக்கள் முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளை கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கினர். இதற்கிடையில் கரோனா ஊரடங்கு காரணமாக கோயில் கட்டுமானப்பணிகள் தள்ளிப் போனது.
அதன்பிறகு, ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு கோயிலை புதுப்பிக்கும் பணிகள் கடந்த சில நாட்களாக தொடந்து நடைபெற்று வந்தது. இந்நிலையில், முருகன் கோயில் கட்டுவதற்கான பணிகள் நேற்று காலை நடைபெற்று வந்தன.
‘பொக்லைன்’ இயந்திரம்மூலம் பூமியில் பள்ளம் தோண்ட முயன்றபோது 7 அடி ஆழத்தில் கற்சிலை ஒன்று பூமிக்கு அடியில் புதைந்த நிலை யில் இருப்பதை கட்டிடப் பணியாளர்கள் கண்டு திடுக்கிட்டனர்.
உடனடியாக கோயில் தர்மகர்த்தா சத்தியநாதன் மற்றும் கோயில் பூசாரி மணி ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து தகவல் வெளியானதும், வக்கணம்பட்டி கிராமத்தையொட்டியுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட பொது மக்கள் அங்கு திரண்டனர். பிறகு கோயில் நிர்வாகிகள் முன்னிலையில் பூமியில் புதைந்திருந்த கற்சிலை மீட்கப்பட்டு அதிலிருந்த மண்ணை அகற்றி பார்த்தபோது அந்த கற்சிலை அழகிய முருகன் சிலை என்பதும், அச்சிலை 3 அடி உயரமுள்ளது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து, முருகன் கோயில் கட்டுவதற்காக தேர்வு செய்யப்பட்ட இடத்தில் பூமிக்கு அடியில் முருகன் கற்சிலை கண்டெடுக்கப்பட்டதால் பக்தி பரவசத்தில் ஆழ்ந்த பொதுமக்கள் ‘அரோகரா, அரோகரா’ என்ற கோஷம் எழுப்பி பரவசமடைந்தனர். பிறகு, முருகன் கற்சிலையை கோயில் நிர்வாகிகள் பத்திரமாக மீட்டு மாரியம்மன் கோயில் வளாகத்தில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்து நேற்று வழிபாடு நடத்தினர்.
மேலும், முருகன் கோயில் கட்டுமானப்பணிகள் முடிந்த பிறகு இதே சிலை அங்கு பிரதிஷ்டை செய்யப்படும் என கோயில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.