தமிழகம்

மழைநீர் வடிகால் அமைக்கும் பணி சென்னையில் விரைவில் தொடக்கம்: மாநகராட்சி தகவல்

செய்திப்பிரிவு

சென்னை மாநகராட்சியில் மேலும் 11 கோட்டங்களில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி விரைவில் தொடங்க உள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சியின் 3 மண்டலங் களில் ரூ.41 கோடியே 22 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால்கள் அமைக்க மாநகராட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டுள்ளது. இதன்படி, 11 கோட்டங்களில் இப்பணிகளைத் தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதன்படி, ஆர்.கே.நகர் 4-வது மண்டலம் 34, 39, 40, 41 ஆகிய வார்டுகளை உள்ளடக்கிய பகுதிகளில் கான்கிரீட் சுவர் அமைத்தல், பக்கவாட்டு சாலை அமைக்கும் பணி, கால்வாயில் மிதக்கும் மேடை மற்றும் பள்ளம் தோண்டும் இயந்திரம் மூலம் தூர்வாரும் பணிகள் ரூ.31 கோடியே 40 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட உள்ளன.

8-வது மண்டலம் 94, 103, 104 ஆகிய வார்டுகளை உள்ளடக்கிய பகுதிகளில் மழைநீர் வடிகால் கட்டுதல், ஆர்சிசி பெட்டக வடிவ கால்வாய் கட்டும் பணி ரூ.7 கோடியே 93 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட உள்ளன.

15-வது மண்டலம் 192-வது வார்டில் தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சி நிதியின் மூலமாக தமிழ்நாடு நிலையான நகர்ப்புற வளர்ச்சி திட்டம் மூலம் கூவம் மற்றும் அடையாறு வடிநிலப் பகுதிகளில் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணியும் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்த பணிகள் விரைவில் தொடங்க உள்ளன.

இத்தகவலை சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT