தமிழகம்

அரசு வெட்டிக்கொடுத்த பண்ணைக்குட்டை மூலம் விவசாயம் செய்து வருவாய் ஈட்டும் சகோதரர்கள் 

சுப.ஜனநாயகச் செல்வம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அரசு வெட்டிக்கொடுத்த பண்ணைக்குட்டையில் தண்ணீரைத் தேக்கி விவசாயம் செய்வதோடு, குட்டைக்குள் மீன்கள் வளர்ப்பு, கரையில் காய்கறி சாகுபடி என வருவாய் ஈட்டி வருகின்றனர் அய்யனார்குளம் சகோதரர்கள்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அய்யனார்குளம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி காந்தி- லெட்சுமி ஆகியோரின் மகன்கள் ஞானப்பிரகாசம் (37), வினோத்குமார் (35). இவர்கள் இருவரும் பண்ணைக்குட்டை மூலம் விவசாயம் செய்தும், குட்டைக்குள் மீன் வளர்ப்பு, கரையில் காய்கறிகள் சாகுபடி ஆகியவை மூலம் வருவாய் ஈட்டி வருகின்றனர். வீட்டுக்குத் தேவையானவைபோக மீதமுள்ளவற்றை விற்பனை செய்தும், கால்நடைகளுக்குத் தேவையான தீவனங்களையும் அதிலிருந்தே உற்பத்தி செய்து கொள்கின்றனர்.

இதுகுறித்து சகோதரர்கள் ஞானப்பிரகாசம், வினோத்குமார் ஆகியோர் கூறியதாவது:

’’கால்வாய்ப் பாசனம் மற்றும் ஆழ்துளைக் கிணறு மூலம் 2 ஏக்கரில் இருபோகம் நெல் விவசாயம் செய்து வந்தோம். ஆழ்துளைக் கிணற்றில் தண்ணீர் வற்றியது. அதற்காகக் கடந்த 2019-ல் செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியம் மூலம் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் ரூ.1 லட்சம் மதிப்பில் 20 சென்ட் பரப்பளவில் பண்ணைக்குட்டை வெட்டி தந்தனர். மழைக்காலங்களில் தண்ணீர் தேங்குவதன் மூலமும், வைகை பாசனம் மூலமும் தண்ணீர் வரும். எப்போதும் தண்ணீர் தேங்கியிருப்பதால் ஆழ்துளைக் கிணற்றிலும் நீர்மட்டம் உயர்ந்தது.

மேலும் பண்ணைக்குட்டை கரையைச் சுற்றியுள்ள இடங்களில் 50 வாழை, 30 அகத்தி, 15 தென்னை, 10 கொய்யா, சப்போட்டா, நெல்லிக்காய், கருவேப்பிலை, சீத்தா, மா, பலா, கத்தரி, தக்காளி, கீரை வகைகள் என ஒரு அடி இடத்தைக்கூட வீணாக்காமல் நட்டோம். தற்போது 3 ஆண்டுகளை நெருங்கும் நிலையில் தென்னையைத் தவிர அனைத்தும் பலன் கொடுக்க ஆரம்பித்துவிட்டன. கரையின்கீழ் கோ 4 புல் நட்டுள்ளதால் மண் அரிப்பைத் தடுப்பதோடு கால்நடைகளுக்கும் தீவனமாகிறது. வீட்டுக்குத் தேவையானவை போக மீதமுள்ளவற்றை விற்பனை செய்கிறோம்.

பண்ணைக்குட்டையில் தேங்கும் நீரில் கட்லா, ரோகு, கெண்டை, சில்வர் கிராப் ஆகிய மீன்களையும் வளர்த்து வருகிறோம். மீன்களுக்குத் தவிடு, புண்ணாக்கு, கால்நடைக் கழிவுகள், கரை மீதுள்ள தாவரக் கழிவுகளையும் இடுவதால் அது தீவனமாகிறது. மழைக் காலங்களில் பண்ணைக் குட்டையில் தண்ணீர் தேங்கி நிலத்தடி நீர்மட்டம் உயரும். வறட்சிக் காலங்களில் பண்ணைக்குட்டையில் தண்ணீர் குறையும்போது அதனை ஈடுகட்ட ஆழ்துளைக் கிணற்றிலிருந்து தண்ணீர் பாய்ச்சுவோம். இத்துடன், ஆடு, மாடு, கோழிகள் வளர்ப்பதால் ஆண்டு முழுவதும் வருவாய் கிடைக்கிறது’’.

இவ்வாறு சகோதரர்கள் ஞானப்பிரகாசம், வினோத்குமார் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT