தவறு செய்யும் இ- சேவை மையங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்.ராமச்சந்திரன் எச்சரித்துள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நிர்வாக வசதிக்காக எப்படி மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதோ அதே போன்று பெரிய வட்டங்களையும் பிரித்தால் தான் நிர்வாகம் செய்ய வசதி சரியாக இருக்கும் என்கிற எண்ணம் அரசுக்கு இருக்கிறது.
முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து இ-சேவை மையங்களிலும் தவறுகள் நடப்பது இல்லை. ஒருசில இ-சேவை மையங்களில் தவறு நடக்கும் பட்சத்தில் அனுமதி ரத்து செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
மதுரை விமான நிலைய விரிவாக்கப் பணி ஏறத்தாழ முடிவடையும் நிலையில் உள்ளது. அதற்காக 615 ஏக்கர் நிலம் கையகப்படுத்துகிறோம்.
அதில், 460 ஏக்கர் பட்டா நிலங்களும், 161 ஏக்கர் புறம்போக்கு நிலங்களும் அடங்கும். அனைத்து செலவுகளுக்கும் சேர்த்து ரூ.200 கோடி வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. புறம்போக்கு நிலங்களில் அரசுத் துறைக்கு சொந்தமானதும் உள்ளன. அதற்குரிய துறைகளில் அனுமதியை பெறுவோம்.
நில ஒப்படைப்பு உரிமையாளர்களுக்குரிய நிதி ஒதுக்கப் பட்டு, அவர்களுக்குக் கொடுத்துவிட்டோம். முன்பு இருந்த அதிகாரிகள் எப்படி பேசி முடித்தார்களோ அந்த அடிப்படை யிலேயே முடிவு வரும்.
நாங்கள் புதிதாக எதுவும் குழப்ப விரும்பவில்லை. எங்களைப் பொறுத்த அளவில் விரிவாக்கப் பணி விரைவில் நடக்கவேண்டும், என்றார்.