தமிழக அரசு மருத்துவமனைகளில் மருந்தாளுநர் பணிக்கு பி.பார்ம் படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம் என்ற தமிழக அரசின் அறிவிப்புக்கு, பாமக இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு மருத்துவமனைகளில் மருந்தாளுநர் பணிக்கு டி.பார்ம் படித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கை வெளியிடப்பட்டது. இந்நிலையில், பி.பார்ம் படித்தவர்களும் விண்ணப்பிக்கும் வகையில் அறிவிப்பு வெளியிட வேண்டும் என, அன்புமணி வலியுறுத்தியிருந்தார். இந்நிலையில், மருந்தாளுநர் பணிக்கு பி.பார்ம் படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம் என, நேற்று (ஜூலை 20) புதிய அறிவிக்கை வெளியிடப்பட்டது.
இது தொடர்பாக, அன்புமணி இன்று (ஜூலை 21) தன் ட்விட்டர் பக்கத்தில், "தமிழக அரசு மருத்துவமனைகளில் மருந்தாளுநர் பணிக்கு பி.பார்ம் படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. தமிழக அரசின் இந்த அறிவிப்பு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது!
மருந்தாளுநர் பணிக்கு பி.பார்ம் படித்தவர்களையும் பரிசீலிக்க வேண்டும் என்று கடந்த 11-ம் தேதி அறிக்கை வெளியிட்டிருந்தேன். அதையேற்று, தமிழக அரசு அறிவிக்கை வெளியிட்டிருக்கிறது. இதன் மூலம் மிகப்பெரிய அநீதி களையப்பட்டிருக்கிறது!
மருந்தாளுநர் பணிக்கான கல்வித் தகுதியில் செய்யப்பட்டுள்ள மாற்றத்தால், வேறு அரசுப் பணி வாய்ப்பு இல்லாத பல்லாயிரக்கணக்கான பி.பார்ம் பட்டதாரிகள் பயனடைவார்கள். அவர்கள் வாழ்வில் புதிய வெளிச்சம் பரவட்டும்!" எனப் பதிவிட்டுள்ளார்.