தமிழகம்

தேர்தலின்போது திமுக அளித்த வாக்குறுதியின்படி தமிழகத்தில் மின் கட்டண கணக்கீட்டு முறையை மாதம்தோறும் மேற்கொள்ள வேண்டும்: முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

தமிழகத்தில் மாதம்தோறும் மின்சாரகட்டணம் கணக்கீடு செய்யும் தேர்தல் வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:

தேர்தலின்போது, மின்பயன்பாட்டு கணக்கெடுப்பு மாதம் ஒருமுறையாக மாற்றி அமைக்கப்படும் என திமுக வாக்குறுதி அளித்தது. ஆனால், அதை செயல்படுத்தவில்லை.

ஜூலை 1-ம் தேதி எடுக்க வேண்டிய மின் அளவீடு எடுக்கப்படவில்லை. கடந்த 2019-ம் மார்ச் மாத கட்டணத்தை செலுத்தும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைவான மின்சாரத்தை உபயோகப்படுத்தி இருந்தாலும், அதிக கட்டணம் செலுத்த வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

அதிகப்படியான கட்டணத்தால் பெண் தற்கொலை முயற்சி என்றசெய்திகள் வருகின்றன. குத்துமதிப்பாக கணக்கிட்டு ஆன்லைனில் கட்டணம் அனுப்பப்படுகிறது. இதைவைத்து அதிக மின்சாரம் பயன்படுத்தியதாக டெபாசிட் உயர்த்தப்படுவதாக நோட்டீஸ் அனுப்புகின்றனர் என செய்திகள் கூறுகின்றன.

2 மாத திமுக ஆட்சி மீண்டும் மக்களை இருளில் தள்ளியுள்ளது. மின்மிகை மாநிலமாக இருந்த தமிழகத்தில் செயற்கையான மின்வெட்டை ஏற்படுத்துகின்றனரோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

மின்சாரம் இல்லாமல் அவதி

கடந்த சில நாட்களாக மதுரை உள்ளிட்ட பல மாவட்டங்களில் பகலிலும், இரவிலும் பல மணி நேரம் மின்சாரம் இல்லாமல் மக்கள் அவதிப்படுகின்றனர். தமிழகத்தில் மின் கட்டணமும் தற்போது 2 முதல் 3 மடங்கு வரை அதிகமாக வசூலிக்கப்படுகிறது.

ஊரடங்கு காலத்தில் மக்கள் உரிய வருமானம் இல்லாமல் தவித்து வரும் சூழலில், இதுபோன்ற பொருளாதார சுமையை ஏற்படுத்துவது, மக்களை பாதிப்படையச் செய்துள்ளது.

மின்வாரியத்தின் இத்தகைய நிர்வாகத் திறனற்ற செயல்களை வன்மையாக கண்டிக்கிறேன். உரிய கணக்கெடுப்பு நடவடிக்கைகள் மூலம் இதற்கு தீர்வு காண வேண்டும்.

மாதம் ஒருமுறை மின்சாரம் கணக்கெடுக்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதிப்படி ஆகஸ்ட் மாதம் முதல், மீட்டர் கணக்கீடு எடுக்க அரசு உத்தரவிட வேண்டும். இல்லாவிட்டால், அதிக கட்டண சுமையால் தவிக்கும் மக்களின் கோபத்துக்கு அரசு ஆளாக நேரிடும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT