தமிழகம்

பட்டப்படிப்பு வரை தமிழில் படித்தோருக்கு 20% இடஒதுக்கீடு: குரூப் 1 தேர்வுக்கு விலக்கு கோரிய அரசின் மனு தள்ளுபடி

செய்திப்பிரிவு

ஒன்று முதல் பட்டப்படிப்பு வரை தமிழ் வழியில் பயின்றோருக்கு மட்டுமே 20 சதவீத இடஒதுக்கீடு சலுகை என்ற உத்தரவில் இருந்து,2020-ம் ஆண்டு குரூப் 1 தேர்வுக்குவிலக்குக் கோரி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

தேர்வாணையத்தின் சார்பில் உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 2019-ல்நடத்திய குரூப் 1 தேர்வில் ஒன்றுமுதல் பட்டப்படிப்பு வரை தமிழ்வழிக் கல்வியில் பயின்றோருக்கு மட்டுமே அரசு வேலைவாய்ப்பில் அளிக்கப்படும் 20 சதவீத இடஒதுக்கீட்டுச் சலுகையை வழங்க வேண்டும் என கடந்த ஆண்டு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

அரசுப் பணியாளர் தேர்வாணையம் 2020-ம் ஆண்டுக்கான குரூப் 1முதல் நிலைத் தேர்வு முடிவுகள் பிப்.9-ல் வெளியானது. இதில் உயர் நீதிமன்றம் கடந்த ஆண்டுபிறப்பித்த தமிழ் வழிக் கல்வி இடஒதுக்கீட்டுச் சலுகை தொடர்பான உத்தரவைப் பின்பற்றவில்லை.

எனவே, 2020-ம் ஆண்டு குரூப் 1தேர்வில் ஒன்று முதல் பட்டப்படிப்புவரை தமிழ் வழியில் கல்விபயின்றோருக்கு மட்டும் 20 சதவீதஇட ஒதுக்கீட்டுச் சலுகை வழங்கவேண்டும் என உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைச் செயல்படுத்துவதில் இருந்து விலக்கு அளித்துஉத்தரவிட வேண்டும் இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் வாதிடும்போது, ‘2020-ம் ஆண்டுக்கான குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. உயர் நீதிமன்ற உத்தரவின்படி குரூப் 1 தேர்வு முடிவுகளை மாற்றி அமைத்தால் அதிகாரிகள் நியமனத்தில் தாமதம் ஏற்படும்’ என்றார்.

இதையடுத்து நீதிபதிகள், பள்ளிப்படிப்பை ஆங்கில வழியிலும், கல்லூரிப் படிப்பை தமிழிலும் படித்தோருக்கு 20 சதவீத இடஒதுக்கீட்டுச் சலுகை வழங்கலாமா? மதுரை காமராசர் பல்கலைக்கழகம் உள்ளிட்ட சில பல்கலைக்கழகங்களில் தமிழ் வழியில் படித்ததாக போலிச் சான்றிதழ் பெற்று அரசு வேலைக்குச் சேர்கின்றனர்.

இதுகுறித்து தமிழக அரசு விசாரிக்க வேண்டும். அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் கோரிக்கையை ஏற்க முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என உத்தரவிட்டனர்.

SCROLL FOR NEXT