கோப்புப்படம் 
தமிழகம்

நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட செம்மஞ்சேரி காவல் நிலையம் செயல்பட அனுமதிக்க முடியாது: உயர் நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

நீர்நிலையில் கட்டப்பட்டுள்ள செம்மஞ்சேரி காவல் நிலையத்தை, அங்கு செயல்பட அனுமதிக்க முடியாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக அறப்போர் இயக்கம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், “காஞ்சிபுரம் மாவட்டம் செம்மஞ்சேரியில் தாமரைக்கேணி என்ற நீர்நிலையை ஆக்கிரமித்து புதிதாக காவல் நிலையம் கட்டப்பட்டுள்ளது. இதற்கு சிஎம்டிஏ ஒப்புதல் பெறவில்லை. எனவே செம்மஞ்சேரி காவல் நிலையம் செயல்பட தடை விதிக்க வேண்டும். நீர்நிலையை பழைய நிலைக்கு மாற்ற உத்தரவிட வேண்டும்” என்று கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த உயர் நீதிமன்றம், இது தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய ஐஐடி பேராசிரியர்கள், மாணவர்கள் அடங்கிய குழுவை அமைத்து உத்தரவிட்டு இருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஐஐடி ஆய்வுக்குழு சமர்ப்பித்த அறிக்கையில், “புதிய காவல் நிலையத்தை இடிப்பதால் மட்டும் நீர்நிலையை ஒட்டுமொத்தமாக மீட்டு விட முடியாது. ஆக்கிரமிப்பில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் கட்டிடங்களையும் இடித்தால் மட்டுமே அந்த நீர்நிலையை காக்க முடியும்” என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அதையடுத்து நீதிபதிகள், ‘‘நாட்டில் உள்ள நீர்நிலைகளை ஆக்கிரமிப்புகளிலிருந்து மீட்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது. எனவே தமிழக அரசு சம்பந்தப்பட்ட நீர்நிலையை பாதுகாக்க நிபுணர் குழுவை அமைக்க வேண்டும். மிகப்பெரிய அளவில் கட்டுமானங்களை இடிக்காமல், நீர்நிலையை மீட்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளனவா என்பது குறித்து மனுதாரர் மற்றும் ஐஐடி குழுவுடன் அரசு ஆலோசித்து நீதிமன்றத்துக்கு தெரிவிக்க வேண்டும்.

அதேநேரம் அப்பகுதியில் ஏற்கெனவே நடந்து கொண்டிருக்கும் மற்றும் புதிய கட்டுமானங்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. மேலும் நீர்நிலையை ஆக்கிரமித்து புதிதாக கட்டப்பட்டுள்ள செம்மஞ்சேரி காவல் நிலையம் அங்கு செயல்பட அனுமதிக்க முடியாது” என உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்துள்ளனர்.

SCROLL FOR NEXT