தேர்தலில் வெற்றிபெற்று 80 நாட்களை கடந்தும் பேரவை துணைத் தலைவர், அரசு கொறடா, முதல்வரின் நாடாளுமன்ற செயலர் பதவிகள் காலியாகவே உள்ளன. வாய்ப்பு கிடைக்குமா என எம்எல்ஏக்கள் காத்துள்ளனர்.
புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. முதல் வராக ரங்கசாமி மே 7-ம் தேதி பதவியேற்றார். அமைச்சர்களை பங்கிடுவதில் இரு கட்சியிலும் கடும் மோதல் ஏற்பட்டது. இதனால் பல சுற்று பேச்சுவார்த்தை நடந்தது. முதல்வர் ரங்கசாமி பாஜக மேலிடத்திடம் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து இழுபறி முடிவுக்கு வந்தது. இதில் பாஜகவுக்கு பேரவைத் தலைவர், 2 அமைச் சர்கள், என்ஆர் காங்கிரஸூக்கு 3 அமைச்சர்கள், துணை பேரவைத் தலைவர் பதவிகள் வழங்க முடிவு செய்யப்பட்டது.
பேரவைத் தலைவர் தேர்தலுக்கு வேறு எம்எல்ஏக்கள் யாரும் மனுத்தாக்கல் செய்யாததால் செல்வம்போட்டியின்றி தேர்வு செய்யப் பட்டு கடந்த ஜூன் 16-ல் பதவி யேற்றார். 50 நாட்களுக்கு பிறகுசுமூக உடன்பாடு ஏற்பட்டு என்ஆர் காங்கிரஸில் லட்சுமிநாராயணன், தேனீ ஜெயக்குமார், சந்திர பிரி யங்கா, பாஜகவில் நமச்சிவாயம், சாய் சரவணக்குமார் ஆகியோர் ஜூன் 27-ல் அமைச்சர்கள் பதவியேற்றனர். அதன்பின்னர் அவர்க ளுக்கு துறைகள் ஒதுக்கப்படாமல் இருந்தது. இருவாரங்களுக்கு பிறகுஜூலை 11-ல் அமைச்சர்களுக்கான துறைகள் முறைப்படி அறிவிக்கப் பட்டு அரசிதழில் வெளியானது.
தேர்தலில் வெற்றிபெற்று கிட்டத் தட்ட 80 நாட்கள் ஆன பிறகும் பேரவை துணைத் தலைவர், அரசுகொறடா, முதல்வரின் நாடாளு மன்ற செயலர் பதவிகள் நிரப்பப் படாமல் உள்ளது. கூட்டணி பேச்சுவார்த்தையில் பேரவை துணைத் தலைவர், அரசு கொறடாபதவிகள் என்ஆர் காங்கிரஸூக்கும், மீதமுள்ள நாடாளுமன்ற செயலர்பதவி பாஜகவுக்கும் ஒதுக்கப்பட் டுள்ளது.
இதுதொடர்பாக ஆளும் கட்சிகள் தரப்பில் விசாரித்தபோது, “முதல்வர் ரங்கசாமியை பேரவைத் தலைவர் செல்வம் சந்தித்து பேரவை துணைத் தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்துவது தொடர்பாக உரையாடியுள்ளார். இதையடுத்து பேரவை துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் விரைவில் நடத்தப்பட உள்ளது. அதற்கான அறிவிப்பு வெளியாகும். அதேநேரத்தில் அடுத்த மாதம் பட்ஜெட் கூடவுள்ள நிலையில் முக்கிய பங்கு வகிக்கும் அரசு கொறடா பதவியை உடனே நியமிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள் ளது. அப்பதவியிலும் விரைவில் நியமனம் நடக்கும்” என்றனர்.
தேர்தலில் வெற்றிபெற்று 3 மாதங்கள் முடிவடைய உள்ள சூழலில் மீதமுள்ள பதவிகள் யாருக்கு ஒதுக்கப்படும் என்று இரு கட்சி எம்எல்ஏக்களும் காத்திருப்பில் உள்ளனர்.