மேகேதாட்டுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசைக் கண்டித்து திருச்சியில் நேற்று சாலை மறியலில் ஈடுபட்ட 5 பெண்கள் உட்பட விவசாயிகள் 115 பேரை போலீஸார் கைது செய்தனர்.
காவிரியின் குறுக்கே மேகே தாட்டுவில் அணைக் கட்ட மேற் கொள்ளும் நடவடிக்கைகளை கர்நாடக அரசு கைவிட வேண்டும். 3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். விவசாய விளைப் பொருட்களுக்கு லாபகரமான விலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, டெல்லிக்குச் சென்று போராட்டம் நடத்த தேசிய- தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் முடிவு செய்திருந்தனர்.
இதற்காக திருச்சி அண்ணா மலை நகரிலிருந்து சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.அய்யாக் கண்ணு தலைமையில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் நேற்று ஜங்ஷன் ரயில் நிலையத்துக்கு ஊர்வலமாக புறப்பட்டனர். கரூர் புறவழிச் சாலையில் அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதனால், விவசாயிகள் அங்கு அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
போராட்டம் காரணமாக சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அப்போது, வாகன ஓட்டிகள் சிலர், அய்யாக் கண்ணு உள்ளிட்ட விவசாயிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் 5 பேர் உட்பட 115 பேரை போலீஸார் கைது செய்தனர்.
ஆர்ப்பாட்டம்
இதேபோல, மேகேதாட்டுவில் அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்தினர், நேற்று திருச்சி தலைமை அஞ்சல் நிலையம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், அமைப்பின் நிர்வாகிகள் தனபாலன், ரவீந்திரன், கோபாலகிருஷ்ணன் உட்பட 100-க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.