வேலூரில் ஆயுதப்படை காவலர் அடுக்குமாடி குடியிருப்பு நுழைவு வாயில் அருகே ஆபத்தான நிலையில் பாதியில் கைவிடப்பட்ட ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்ட கால்வாய் பணியை விரைந்து முடிக்காவிட்டால் குடும்பத்தினருடன் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக காவலர்கள் தெரிவித்துள்ளனர்.
வேலூர் நேதாஜி விளையாட்டரங்கம் அருகே மாவட்ட காவல் துறையின் ஆயுதப்படை காவலர்களுக்கான அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. ஆயிரத்துக்கும்மேற்பட்டோர் வசித்து வரும் இந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகில், வேலூர் மாநகராட்சி ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் கழிவுநீர் கால்வாய் கட்டும் பணி கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது.
அப்போது, காவலர்கள் குடும்பத்தினர் வந்து செல்வதற்காக நுழைவு வாயிலின் ஒரு பகுதியை மட்டும் விட்டுவிட்டு மற்ற பணிகளை தொடர்ந்தனர். தற்போது, கால்வாய் அமைக்கும் பணிகள் அனைத்தும் முடிந்த பிறகும் விடுபட்ட சுமார் 10 அடி நீளம் கொண்ட கால்வாய் பணியை மட்டும் இதுவரை முடிக்காமல் விட்டுள்ளனர். அத்துடன் விடுபட்ட பகுதியில் ஆபத்தான நிலையில் இரும்பு கம்பிகள் வெளியே தெரிவதால் குடியிருப்பில் வசிக்கும் சிறுவர்கள், வாகன ஓட்டிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் விதமாக இருப்பதாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து காவலர்கள் குடும்பத்தினர் கூறும்போது, ‘‘ஒரே நேரத்தில் பள்ளம் தோண்டினால் அனைவரும் வந்து செல்ல முடியாது என்பதால் ஒரு பகுதியை மட்டும் விட்டுவிட்டு கடைசியில் முடிக்குமாறு கூறினோம். ஆனால், 10 அடி நீளத்துக்கு கால்வாய் அமைக்காமல் இரும்பு கம்பி வெளியே தெரியுமாறு அப்படியே விட்டுவிட்டனர். ஆபத்தான இரும்பு கம்பிக்கு பயந்தே குடியிருப்பு இரும்பு கேட்டின் ஒரு பகுதியை மூடி வைத் திருக்கிறோம்.
இது தொடர்பாக ஆயுதப்படை அதிகாரிகள் சிலர் மாநகராட்சி நிர்வாகத்தை தொடர்பு கொண்டு கேட்டுள்ளனர். அப்போது, நிதி இல்லை என்றும் அரசிடம் இருந்து நிதி வந்ததும் கட்டுவதாக கூறியுள்ளனர். சுமார் ஆயிரம் பேர் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பு மக்களுக்கு ஆபத்தாக இருக்கும் இந்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணாவிட்டால் காவலர்கள் தங்கள் குடும்பத்தினருடன் சேர்ந்து போராட்டம் நடத்தவும் தயாராக இருக்கிறோம்’’ என தெரிவித்தனர்.