அலைபேசிகள் இன்றைய இளைஞர்களை அலைக்கழித்து வருவதால், அவர்கள் தங்கள் மொழி, பண்பாடு, உறவுகளை இழந்து வருவதாக எழுத்தாளர் இந்திரா சவுந்திரராஜன் வேதனை தெரிவித்தார்.
திண்டுக்கல் மாவட்டம், காந்திகிராமம் கிராமியப் பல்கலைக்கழகத்தில் நிர்மலா மோகன் அறக்கட்டளை தொடக்கவிழா நடைபெற்றது. பல்கலைக்கழகத் துணைவேந்தர் சு.நடராஜன் தலைமை வகித்தார். பேராசிரியர் நிர்மலா அறிமுகவுரை நிகழ்த்தினார்.
எழுத்தாளர் இந்திராசவுந்திரராஜன் ‘எழுத்து- நேற்று, இன்று, நாளை’ என்ற தலைப்பில் பேசியதாவது: சொற்பொழிவுகள் மாணவர்களின் எதிர்கால வாழ்வுக்கு வழிகாட்டி. மாணவர்கள் வாசிக்கும் பழக்கத்தை இடைவிடாமல் மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக இலக்கியப் படைப்புகளையும், தன்னம்பிக்கை நூல்களையும், செய்தித் தாள்களையும் தேடிச் சென்று படிக்க வேண்டும். 1980-ல் எழுத்தை வாசிப்பவர்களும், நேசிப்பவர்களும் அதிகம் பேர் இருந்தனர். ஆனால், இன்று எழுத்தாளர்கள் அதிகம் பேர் இருக்கின்றனர்.
நூல்களும் அதிகம் வருகின்றன. ஆனால், வாசிப்பாளர்கள் தான் குறைவாக உள்ளனர். ஒரு காலத்தில் நாங்கள் நாளிதழ்கள், வார இதழ்களின் வருகைக்காக காத்துக்கிடப்போம். இன்று நிலைமை தலைகீழாக உள்ளது. வாசிப்பதற்கான களங்கள் இடிந்து கிடக்கின்றன. எத்தகைய நூலாக, பத்திரிகையாக இருந்தாலும் விரல் நுனிக்கு வரவழைத்து படித்துவிடும் அளவுக்கு தொழில்நுட்பம் மேம்பட்டுள்ளது. ஆனால் இளைஞர்கள் தான் வாசிக்கத் தயாராக இல்லை. அலைபேசிகள் இன்றைய இளைஞர்களை அலைக்கழித்து வருகின்றன.
இதனால் அவர்கள் தங்களது மொழி, பண்பாடு, உறவை இழந்துவருகின்றனர். வாசிக்கும் பழக்கும் வாழ்க்கையை மேம்படுத்தும். மொழியைப் பாதுகாக்கும். பண்பாட்டை புரியவைக்கும். வாழ்க்கைக்கு அர்த்தம் தரும் என்றார்.
தமிழ்த்துறை தலைவர் ராஜரத்தினம் வரவேற்றார், பேராசிரியர் முத்தையா நன்றி கூறினார். பேராசிரியர் லட்சுமி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.