திருப்பூர் மாநகரின் பல்வேறு பகுதிகளில் மிகவும் மோசமாக பழுதடைந்துள்ள சாலைகளை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பூர் மாநகராட்சி 12-வது வார்டு வளையன்காடு பிரதான சாலை சாமுண்டிபுரம் பகுதியில் கடந்த 6 மாதங்களாக சாலை பழுதடைந்திருப்பதால், பயன்படுத்த முடியாத நிலைக்கு பாதசாரிகளும், வாகன ஓட்டிகளும் தள்ளப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக அப்பகுதியை சேர்ந்த கிருத்திகை வாசன் என்பவர் கூறும்போது, "எங்கள் பகுதி சாலை சேதமடைந்து 6 மாதங்களாகிவிட்டன. பலரும் வேலைக்கு சென்று வரும் பிரதான சாலை. மாநகராட்சி நிர்வாகம் உட்பட பல்வேறு இடங்களில் முறையிட்டும் சாலை சீரமைக்கப்படவில்லை. கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழைக்கு குண்டும், குழியுமாக உள்ள சாலையில் தண்ணீர் தேங்கிவிடுகிறது. சாலையும் சேதமடைந்திருப்பதால் சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது. முற்றிலும் காலாவதியான சாலையாக உள்ளது. போர்க்கால அடிப்படையில் சாலைகளை செப்பனிட்டு, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்" என்றார்.
குமரப்பபுரம்
திருப்பூர் ராயபுரம் குமரப்புரம் 2-வது வீதியில் பாதாள சாக்கடை திட்டத்துக்காக தோண்டப்பட்ட குழியால், அப்பகுதியில் உள்ள குடிநீர் குழாய் சேதமடைந்து, குளம்போல தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகினர்.
இதுதொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த பிரபாகர் என்பவர் கூறும்போது, "நகரின் பிரதான பகுதி என்பதால் ஏராளமான வாகன ஓட்டிகள் பயன்படுத்துகின்றனர். தற்போது ஏற்பட்டுள்ள குழியால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இரவு நேரங்களில் தண்ணீர் தேங்கியிருக்கும் குழியில் இருசக்கர வாகனங்களில் தடுக்கி விழும் நிலையும் ஏற்படுகிறது. உடனடியாக சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.