அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டிய வீட்டை இடித்து அகற்றும் பணியில் ஈடுபட்ட நெடுஞ்சாலைத்துறை மற்றும் வருவாய் துறையினர். படம்: ஜோதி ரவிசுகுமார். 
தமிழகம்

உயர் நீதிமன்ற உத்தரவின்படி ஓசூரில் அரசு நிலம் மீட்பு

செய்திப்பிரிவு

ஓசூர் கோட்டைமாரியம்மன் கோயிலின் பின்புறம் அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டிருந்த கோயில் அர்ச்சகரின் வீட்டை சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மீட்டனர்.

ஓசூர் - தேன்கனிக்கோட்டை சாலையில் ஐடிஐ அருகே சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோட்டைமாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் அர்ச்சகராக இருந்து வந்த குமாரின் மறைவுக்கு பிறகு அவருடைய மகன் ஜெகன்நாதன் அர்ச்சகராக பணியாற்றி வருகிறார்.

கோட்டைமாரியம்மன் கோயிலின் பின்புறம் உள்ள அரசு நிலத்தில் (சர்வே எண்-195) கோயில் அர்ச்சகர் குடும்பத்தினர் வீடு கட்டி வசித்து வந்துள்ளனர். ஓசூர் - தேன்கனிக்கோட்டை சாலையை ஒட்டியவாறு உள்ள மாநில நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான நிலத்தில் ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டப்பட்டுள்ளது குறித்து சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. இந்த வழக்கு தீர்ப்பில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள நிலத்தை மீட்க சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டிருந்தது.

அதைத் தொடர்ந்து கடந்த 16-ம் தேதி மாநில நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப்பொறியாளர் கரகேஸ்வரன் மற்றும் வட்டாட்சியர் செந்தில்குமார், டிஎஸ்பி முரளி முன்னிலையில் ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்கும் பணிக்காக போலீஸார் பாதுகாப்புடன் முயற்சி எடுக்கப்பட்டது. அப்போது எதிர்ப்பு தெரிவித்த கோயில் அர்ச்சகர் குடும்பத்தினர், வீட்டை இடிக்க 19-ம் தேதி வரை காலஅவகாசம் தரும்படியும், அதற்குள் வீட்டை காலி செய்வதாகவும் கேட்டுக் கொண்டதால் அப்போது வீட்டை இடிக்காமல் அதிகாரிகள் திரும்பிச் சென்றனர்.

அதைத்தொடர்ந்து நேற்று அவகாசம் முடிந்த நிலையில் மாநில நெடுஞ்சாலைத்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் பொக்லைன் இயந்திரம் உதவியுடன் வீட்டை இடித்து அரசு நிலத்தை மீட்டனர்.

SCROLL FOR NEXT