சென்னை - பெங்களூரூ எக்ஸ்பிரஸ் சாலை திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்த தடை கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு மற்றும் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் வடமங்கலத்தைச் சேர்ந்த சோமசுந்தரம் உள்ளிட்ட 3 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவி்ல், ‘‘சென்னை - பெங்களூரூ இடையே காஞ்சிபுரம், வேலூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்கள் வழியாக புதிதாக எக்ஸ்பிரஸ் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏற்கெனவே திட்டமிட்டுள்ள வழித்தடத்தை மாற்றியுள்ளனர்.
குவாரி உரிமையாளர்கள் அளித்த மனுவை பரிசீலித்த எக்ஸ்பிரஸ் சாலை திட்ட இயக்குநரகம், பெரும்புதூர் தாலுகாவில் உள்ள மாம்பாக்கம், வடமங்கலம் உள்ளிட்ட கிராமங்களில் விவசாய விளைநிலங்களின் வழியாக புதிய சாலை அமைக்க அளவீடு செய்யும் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
ஏற்கெனவே நில உரிமையாளர்களுக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ.12 கோடி அளிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது புதிய வழித்தடம் அமைப்பது தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய விதிகளுக்கு எதிரானது. இதனால் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பாதிக்கப்படுவர் என்பதால் நிலம் கையகப்படுத்தும் திட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தனர்.
இந்த வழக்கை நேற்று விசாரித்த நீதிபதி ஆர்.மகாதேவன், இதுதொடர்பாக மத்திய அரசு மற்றும் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம், சென்னை - பெங்களூரூ எக்ஸ்பிரஸ் சாலை திட்ட இயக்குநர் ஆகியோர் ஒரு வாரத்தில் பதிலளிக்க உத்தரவி்ட்டு, விசாரணையை வரும் ஜூலை 26-க்கு தள்ளி வைத்துள்ளார்.