தமிழகம்

அனைத்துக் கட்சிக் குழுவுடன் டெல்லி சென்று மேகேதாட்டு அணைக்கு எதிர்ப்பு தெரிவிப்போம்: புதுவை முதல்வரிடம் அதிமுக மனு

செய்திப்பிரிவு

மேகேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக அனைத்துக்கட்சி குழுவுடன் டெல்லி சென்று மத்திய அரசிடம் எதிர்ப்பு தெரிவிக்க வலியுறுத்தி முதல்வர் ரங்கசாமியிடம் அதிமுக மனு அளித்துள்ளது.

புதுவை கிழக்கு மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் முதல்வர் ரங்கசாமி, பொதுப்பணி துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் ஆகியோரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

கர்நாடகா மாநிலத்தில் எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும், காவிரி நதி நீர் பங்கீடு விஷயத்தில் நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதி மன்றத்தின் எந்த தீர்ப்பையும் மதித்து நடந்ததில்லை. இந்நிலையில் காவிரி நீர் பாயும் இடத்திற்கு சம்பந்தமில்லாத பெங்களூர்மாநகர் குடிநீர் தேவை என்ற பெயரில், பெங்களூரிலிருந்து 140 கி.மீ தொலைவில் உள்ளமேகேதாட்டு என்ற இடத்தில் காவிரியின் குறுக்கே புதிதாககர்நாடகா அரசு அணை கட்டப் போவதாக அறிவித்துள்ளது.

கர்நாடகத்தில் மேகேதாட்டு அணை கட்ட புதுவை மாநிலத்தின் எதிர்ப்பை தங்கள் கடிதம் மூலம் ஏற்கெனவே பதிவு செய்திருந்தாலும், அனைத்து கட்சி தலைவர்களுடன் நேரில் சென்று வலியுறுத்துவது நம் மாநில உரிமையை வென்றெடுக்க உதவியாக இருக்கும்.

காவிரியின் கடைமடை பகுதியான காரைக்கால் மாவட்ட விவசாயிகள் நலன் கருதி நாமும் நம்முடைய பொதுப்பணித்துறை அமைச்சர் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி தலைவர்களோடு கர்நாடகத்தில் மேகேதாட்டு அணை கட்ட அனுமதி வழங்கக் கூடாது என மத்திய அரசை நேரில் சென்று வலியுறுத்த உரிய ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT