தமிழகம்

புதுச்சேரிக்கு தனிக் கல்வி வாரியம்: கல்வியமைச்சர் நமச்சிவாயம் தகவல்

செய்திப்பிரிவு

புதுச்சேரிக்கு தனிக் கல்வி வாரியம் கொண்டு வர பரிசீலிக்கப்பட்டு வருவதாக கல்வி அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை நேற்று கல்வித் துறை அலுவலகத்தில் வெளியிட்ட அமைச்சர் செய்தியாளர்களிடையே பேசுகையில், “புதுச்சேரிக்கு தனிக்கல்வி வாரியம் அமைக்க பரிசீலினை, அரசுப் பள்ளிகளில் படித்தோருக்கு மருத்துவக் கல்லூரிகளில் 10 சதவீத இடஒதுக்கீடு அளிப்பது, கல்வி உரிமைச் சட்டத்தில் ஏழை குழந்தைகளுக்கு 25 சத இலவசக் கல்வி, புதுச்சேரிக்கு தனிக்கல்வி வாரியம், ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு, ஆசிரியர் பணியிடங்கள் நிரந்தரமாக்கப்படாமல் இருப்பது, அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்துவது உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை செய்ய உள்ளேன். காலி பணியிடங்களை நிரப்புவது பற்றி ஆலோசிப்போம். ஆலோசனைக்குப் பின் இதுதொடர்பான அறிவிப்பு கல்வித்துறை மூலம் வெளியாகும்.

தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை

ஊரடங்கு முடக்க நிலையில், தனியார் பள்ளிகளில் 75 சதவீத கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும். கூடுதலாக வசூலித்தால் எந்தப் பள்ளியாக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளதால், சேர்க்கை நடைமுறை குறித்து அதிகாரிகளிடம் பேசி, அறிவிப்பை வெளியிடுவோம்” என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT