வேலூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டியில் சத்துவாச்சாரி, சேண்பாக் கம் பகுதி மக்களுக்கான நகரப் பேருந்து சேவை வசதி கிடைக்காமல் புறக்கணிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
வேலூர் மாநகர மக்களின் போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்வதில் நகரப் பேருந்து களின் பங்கு முக்கியமாக உள்ளது. வேலூர் மாவட்டத்தில் இருந்து கல்வி, வேலைவாய்ப்பு, தொழில், மருத்துவ சிகிச்சைக்காக வேலூர் வருபவர்கள் நகரப் பேருந்துகளை அதிகம் பயன்படுத்துகின்றனர். காட்பாடி வள்ளிமலை கூட்டுச்சாலை யில் இருந்து புறப்படும் பேருந்துகள் வேலூர் ஆரணி சாலை வழியாக தடம் எண்-2 என்றும், அண்ணா சாலை வழியாக தடம் எண்-1 என்ற எண்களில் பாகாயம் வரை நகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
காட்பாடி ரயில் நிலையம், சித்தூர் பேருந்து நிலையம், புதிய மற்றும் பழைய பேருந்து நிலையம், ராஜா திரையரங்கம் என மாநகர பேருந்து நிறுத்தங்களில் பொதுமக்கள் கூட்டம் எப்போதும் பேருந்துக்காக காத்திருப்பார்கள். அரசு நகரப் பேருந்துகளுடன் தனியார் நகரப் பேருந்துகளும் பொதுமக்களை ஏற்றிச் செல்வதில் எப்போதும் போட்டி இருந்து கொண்டே இருக்கும்.
நகரப் பேருந்துகளின் சேவையை பாகாயத்தில் இருந்து அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வரை நீட்டிக்க வேண்டும் என்பது சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும் கோரிக்கை. இதுவரை ஆட்சியாளர்களால் நிறைவேற்றப்படாமல் உள்ளது. வேலூரில் இருந்து திருவண்ணாமலை, ஆரணிக்கு இயக்கப்படும் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள் மற்றும் அவர்களின் உறவினர்கள் இரண்டாம் தர பயணிகளாகவே நடத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
வேலூர் மாநகரில் அதிக மக்கள் தொகை கொண்ட பகுதியாகவும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், காவல் கண்காணிப்பாளர் அலுவ லகம் மற்றும் அரசு அதிகாரிகள் அதிகம் குடியிருக்கும் பகுதியாக இருக்கும் சத்துவாச்சாரி, வள்ளலார், அலமேலுமங்காபுரம் பகுதிக்கு நகரப் பேருந்து சேவை இல்லாமல் புறக்கணிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் இருந்து சத்துவாச்சாரி முதல் வள்ளலார் வரை ஆட்டோவில்தான் செல்ல முடியும். அங்கிருந்து கிரீன் சர்க்கிள் வரவும் ஆட்டோக்களை மட்டும்தான் நம்பியுள்ளனர். பாகாயம்-காட்பாடி வழித்தட மக்களைப்போல் தங்களுக்கும் நகரப் பேருந்து சேவை வேண்டும் என்ற கோரிக்கையை யாரும் கண்டுகொள்ளாமல் புறக்கணிக் கப்படுவதாக அப்பகுதி மக்கள் கருதுகின்றனர்.
அதேபோல், அப்துல்லாபுரத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், அரசு ஐடிஐ என இருப்பதால் வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து அப்துல்லாபுரம் வரை நகரப் பேருந்துகளை இயக்க வேண்டும் என்ற கோரிக்கையும் நிறைவேற்ற நகரப் பேருந்து களுக்காக புதிய வழித்தடத்தை ஏற்படுத்த வேண்டும் என கோரி வருகின்றனர்.
இதுகுறித்து, வேலூர் மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாவட்டத் தலைவர் ஞானவேலு கூறும்போது, ‘‘வேலூர் மாநகரட்சியில் எல்லா பகுதி மக்களுக்கும் ஒரு மாதிரியான திட்டங்கள் கிடைக்க வேண்டும். ஸ்மார்ட் சிட்டி என்று கூறிவிட்டு ஒரு பகுதி மக்களுக்கு மட்டும் நகரப் பேருந்து சேவை முழுமையாக கிடைக்காமல் இருக்கக்கூடாது. ஏழை, நடுத்தர மக்களுக்காக அடுக்கம்பாறை வரை நகரப் பேருந்துகளை இயக்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் சர்க்கரை வியாதிக்கான மாத்திரை வாங்க ஏராளமான ஏழை, நடுத்தர மக்கள் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு செல்ல வேண்டி இருப்பதால் ஆட்சியாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்’’ என்றார்.
வேலூர் சட்டப்பேரவை உறுப் பினர் கார்த்திகேயன் கூறும் போது, ‘‘கடந்த ஆட்சியின்போதே பெருமுகையில் இருந்து அடுக்கம்பாறை வரை நகரப் பேருந்து இயக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். சேண்பாக்கம், கொணவட்டம் பகுதி மக்களுக்கும் நகரப் பேருந்து சேவை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இது தொடர்பாக மாவட்ட அமைச்சரிடம் மனு அளித்து நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று தெரிவித்தார்.