திமுக மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக தேனாம்பேட்டை போலீஸார் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதியப்பட்ட வழக்குகளை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கில் பேசிய திமுக மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்கள் நீதிபதிகளாக இருப்பது தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி போட்ட பிச்சை எனப் பேசியதாகவும், இது பட்டியல் இன மக்களை அவமதிக்கும் வகையில் உள்ளதாகவும் கூறி, ஆதி தமிழர் மக்கள் கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
அதையடுத்து அவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். மேலும் ஆர்.எஸ்.பாரதி ஜாமீனிலும் விடுவிக்கப்பட்டார். அதேவேளையில் எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.பாரதிக்கு எதிரான வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது. நிலுவையில் உள்ள வழக்கை ரத்து செய்யக் கோரியும், விசாரணைக்குத் தடை கோரியும் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணையில், உயர் நீதிமன்றத்தில், இந்த வழக்கு காலதாமதமாக அரசியல் உள்நோக்கத்துடன் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஆர்.எஸ்.பாரதி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
''ஆர்.எஸ்.பாரதியின் கருத்து பட்டியலின மக்களுக்கு எதிராகவும், உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிராகவும் உள்ளது. உயர் பதவி வகிக்க பட்டியலின மக்களுக்குத் தகுதியில்லை என்ற அர்த்தத்தில் அவர் பேசியுள்ளார். எனவே வழக்கை ரத்து செய்யக் கூடாது'' எனக் காவல்துறை தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
அதேபோல, ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக புகார் அளித்தவர் சார்பில், சமூக நல்லிணக்கம் மற்றும் சமுதாய ஒற்றுமையைச் சீர்குலைக்கும் வகையில் ஆர்.எஸ்.பாரதி பேசியுள்ளார். இது ஏற்புடையதல்ல எனத் தெரிவிக்கப்பட்டது
அனைத்துத் தரப்புகளையும் கேட்ட சென்னை உயர் நீதிமன்றம், ஆர்.எஸ்.பாரதிக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு ஆரம்பக் கட்ட முகாந்திரம் உள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகள் நிரூபணமாகின்றனவா, இல்லையா என்பதை ஆதாரங்களுடன் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டியது விசாரணை நீதிமன்றம்தான் எனக்கூறி வழக்கை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்து, மனுவைத் தள்ளுபடி செய்தது.
இந்நிலையில் தன் மீதான வழக்கு விசாரணைக்குத் தடை கோரியும், வழக்கை ரத்து செய்யக் கோரியும் ஆர்.எஸ்.பாரதி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதி நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
இந்நிலையில், “ஆர்.எஸ்.பாரதி பட்டியலினத்தவர்களுக்கு எதிராக உள்நோக்கத்துடன் பேசியதாகத் தெரியவில்லை. மேலும் அவர் பேசியதாகக் கூறிப்பட்ட கருத்துகள் தற்போது பதியப்பட்ட பிரிவு வழக்குகள் கீழ் ஈர்க்காது” எனத் தெரிவித்த நீதிபதிகள் அமர்வு, ஆர்.எஸ்.பாரதிக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்து உத்தரவிட்டது.