குடியரசுத் தலைவரைச் சந்தித்தபோது தமிழகத்தின் முக்கியப் பிரச்சினைகளான நீட் தேர்வு ரத்து, எழுவர் விடுதலை, மேகதாது அணை பிரச்சினை குறித்துப் பேசவில்லை என பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், அதற்கான காரணங்களை விளக்கிக் கூறினார்.
டெல்லி விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
குடியரசுத் தலைவரிடம் வேறு ஏதேனும் கோரிக்கைகள் வைத்தீர்களா?
வேறு எந்தக் கோரிக்கையும் வைக்கவில்லை.
எழுவர் விடுதலை குறித்து கோரிக்கை வைத்தீர்களா?
இல்லை. எழுவர் விடுதலை குறித்து குடியரசுத் தலைவருக்குக் கடிதம் எழுதியுள்ளேன். தற்போது அந்த விவகாரம் நீதிமன்றத்தில் இருப்பதால், சட்டப்படி நீதிமன்றம் மூலம் நாடவேண்டிய நிலையில் உள்ளோம்.
மேகதாது அணை பிரச்சினை குறித்துப் பேசினீர்களா?
ஏற்கெனவே பிரதமரைச் சந்தித்தபோது அதுகுறித்து கோரிக்கை வைத்துள்ளேன். தொடர்ந்து அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் கூட்டி தீர்மானம் போட்டுள்ளோம். தொடர்ந்து நீர்ப்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் அனைத்துக் கட்சிக் குழு டெல்லி வந்து ஜல்சக்தி துறை அமைச்சரைச் சந்தித்துப் பேசியுள்ளனர். அந்தவகையில் அதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
மேகதாது பிரச்சினை குறித்து கர்நாடக முதல்வர் பிரதமரைச் சந்தித்துள்ளார். அணையைக் கட்டியே தீருவோம் என்று அவர் தெரிவித்துள்ளாரே?
எங்களுக்குப் பிரதமர் இதுகுறித்து உரிய வாக்குறுதி கொடுத்துள்ளார். அதேபோன்று ஜல்சக்தி துறை அமைச்சரும் வாக்குறுதி அளித்துள்ளார். நீதிமன்றத்திலும் இப்பிரச்சினை உள்ளது. ஆகவே, சட்டப்படி இப்பிரச்சினையைச் சந்திப்போம். பேச்சுவார்த்தைக்கு கர்நாடக் அரசு அழைத்தால் செல்லமாட்டோம்.
இதுகுறித்து 3 மாநில முதல்வர்கள் கலந்தாலோசனை நடத்த வாய்ப்புள்ளதா?
அதற்கு அவசியம் இல்லை.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.