திருச்சி சிவா: கோப்புப்படம் 
தமிழகம்

மேகதாது அணை விவகாரம்: மாநிலங்களவையில் திருச்சி சிவா நோட்டீஸ்

செய்திப்பிரிவு

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக, நாடாளுமன்ற மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் திருச்சி சிவா நோட்டீஸ் வழங்கியுள்ளார்.

வழக்கமாக நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் ஜூலை 3-வது வாரத்தில் தொடங்கி, ஆகஸ்ட் மாதத்தில் சுதந்திர தின விழாவுக்கு முன்பாக நிறைவடையும். இதன்படி, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று (ஜூலை 19) தொடங்கி, ஆகஸ்ட் 13-ம் தேதி நிறைவடைய உள்ளது.

கடந்த ஆண்டில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மாநிலங்களவை காலையிலும், மக்களவை பிற்பகலிலும் நடத்தப்பட்டன. தற்போது, கரோனா வைரஸ் பரவல் குறைந்திருப்பதால், இரு அவைகளும் காலை 11 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் மக்களவை, மாநிலங்களவையில் தனிமனித இடைவெளியைப் பின்பற்ற இருக்கைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. மக்களவையில் தற்போதுள்ள 539 எம்.பி.க்களில் 280 பேர் வழக்கமான இருக்கைகளிலும், 259 பேர் பார்வையாளர் மாடத்திலும் அமர வைக்கப்பட உள்ளனர். இந்த கூட்டத் தொடரில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை. இதுவரை 400-க்கும் மேற்பட்ட எம்.பி.க்களுக்கும், 200 அலுவலர்களுக்கும் கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இதனிடையே, நாடாளுமன்றக் கூட்டத்தொடரை சுமுகமாக நடத்த எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என, நேற்று (ஜூலை 18) நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில், மேகதாது அணை விவகாரம் தொடர்பாக, விதி 267-ன் கீழ், அவையை ஒத்திவைத்து விவாதம் நடத்த வேண்டும் என, மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் திருச்சி சிவா நோட்டீஸ் வழங்கியுள்ளார்.

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டினால், தமிழக விவசாயிகள் பாதிக்கப்படுவர் எனத் தமிழக அரசு தொடர்ந்து எதிர்த்து வருகிறது. இந்நிலையில், நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் இன்று பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து அலுவல்களையும் ஒத்திவைத்து இவ்விவகாரம் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என, திருச்சி சிவா நோட்டீஸ் வழங்கியுள்ளார்.

SCROLL FOR NEXT