மருத்துவப் படிப்பில் சேர பொது நுழைவுத் தேர்வு நடத்தக் கூடாது என்று மத்திய அரசுக்கு தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் மருத்துவப் படிப்புக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்த எதிர்ப்பு தெரிவித்து, உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் இந்திய மருத்துவக் கழகம், இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு நாடு முழுவதும் பொது நுழைவுத் தேர்வு நடத்தத் தேவையில்லை என உச்ச நீதிமன்றம் கடந்த 2013-ல் தீர்ப்பளித்துள்ளது.
மருத்துவப் படிப்புக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்தினால் இந்தியா முழுவதும் கிராமம் மற்றும் நுகர்ப்புறத்தில் உள்ள அனைத்து பிரிவைச் சேர்ந்த மாணவர்களும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவதில் பெரும் சிரமத்தை ஏற்படுத்தும். எனவே பொது நுழைவுத் தேர்வு என்ற மத்திய அரசின் முடிவு கிராமப்புற மாணவர்களை பெரிதும் பாதிக்கும். எனவே மத்திய அரசு, இந்தியா முழுவதும் மருத்துவப் படிப்பில் சேர்வதற்கு பொது நுழைவுத் தேர்வு நடத்தக் கூடாது'' என்று வாசன் தெரிவித்துள்ளார்.