புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பேருந்து நிலையம் அருகே நேற்று நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தில் கலந்துகொண்டோர். 
தமிழகம்

தனி மாவட்டம் கோரி அறந்தாங்கியில் கையெழுத்து இயக்கம்

செய்திப்பிரிவு

அறந்தாங்கியை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் உருவாக்கக் கோரி நேற்று கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

திருச்சி மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களை பிரித்து 1974-ல் புதுக்கோட்டை மாவட்டம் உருவாக்கப்பட்டது. இம்மாவட்டத்தில், புதுக்கோட்டை , அறந்தாங்கி ஆகிய 2 நகராட்சிகள், 8 பேரூராட்சிகள், 13 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன.

மாவட்டத்தில் 16.5 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். புதுக்கோட்டை, அறந்தாங்கி, இலுப்பூர் ஆகிய 3 வருவாய் கோட்டங்கள், 12 வட்டங்கள் மற்றும் 6 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன.

கடந்த ஆட்சியில் புதிய மாவட்டங்களை உருவாக்கியபோது, பரந்து விரிந்த மாவட்டமாக உள்ள புதுக்கோட்டையை பிரித்து அறந்தாங்கியை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

ஆலோசனைக் கூட்டம்

இந்நிலையில், தற்போது மீண்டும் அறந்தாங்கி தனி மாவட்ட கோரிக்கையை முன்னிறுத்தி கடந்த வாரம் அறந்தாங்கியில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. அதில், திமுக ஆட்சியின் முதல் பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே அறந்தாங்கி தனி மாவட்ட அறிவிப்பை வெளியிடச் செய்யும் வகையில் தமிழக முதல்வர், அமைச்சர்களை சந்திப்பது, தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கையெழுத்து இயக்கம் போன்ற தொடர் நடவடிக்கைகளில் ஈடுபடுவது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதையடுத்து, தனி மாவட்ட கோரிக்கையை வலியுறுத்தி அறந்தாங்கி பேருந்து நிலையம் அருகே நேற்று கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. அறந்தாங்கி வர்த்தகர் சங்கத் தலைவர் வரதராஜன் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்டச் செயலாளர் முபாரக் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதுகுறித்து கையெழுத்து இயக்கத்தில் கலந்துகொண்டோர் கூறியபோது, “புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், மணமேல்குடி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 115 ஊராட்சிகளும் டெல்டா பகுதியாக உள்ளன.

இந்த ஒன்றியங்களுடன், திருவரங்குளத்தில் 48 ஊராட்சிகள், அரிமளத்தில் 32 ஊராட்சிகள், திருமயத்தில் 33 ஊராட்சிகள் மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தின் தென் பகுதியில் உள்ள பேராவூரணி வட்டத்தில் தேவையான ஊராட்சிகளை பிரித்து அறந்தாங்கியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும்" என்றனர்.

SCROLL FOR NEXT