தமிழகம்

கடந்த 17 நாட்களில் ரயில் மூலம் திருப்பூருக்கு வந்த வட மாநில தொழிலாளர்கள் 9,000 பேருக்கு கரோனா பரிசோதனை: 11 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி

செய்திப்பிரிவு

வட மாநிலங்களில் இருந்து ரயில்கள் மூலமாக திருப்பூருக்கு வந்த 9 ஆயிரம் பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், 11 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.

கரோனா தொற்று முதல் அலை பரவலின்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, திருப்பூர் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் மூடப்பட்டதால், பெரும்பாலான வட மாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர். அதன்பிறகு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் திறக்கப்பட்டபோது, குறிப்பிட்ட சதவீதத்தினர் மட்டுமே திரும்பி வந்தனர்.

இந்நிலையில், கரோனா தொற்றின் 2-ம் அலை பரவலால் மீண்டும் திருப்பூரில் தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டன. இதனால், மீண்டும் தொழிலாளர்கள் திரும்பிச் சென்றனர். தற்போது தொற்று ஓரளவு கட்டுக்குள் வந்துள்ள நிலையில், திருப்பூரில் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் திறக்கப்பட்டன. இதையடுத்து, சொந்த ஊர்களுக்கு சென்ற வடமாநில தொழிலாளர்கள் திருப்பூருக்கு வந்துகொண்டிருக்கின்றனர். அவர்களோடு புதிதாக பலரும் வேலைக்காக வருகின்றனர்.

ரயில்கள் மூலமாக வருவதால் கரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளதை கருத்தில்கொண்டு, சுகாதாரத் துறை சார்பில் ரயில் நிலைய வளாகத்தில் அவர்களுக்கு கட்டாய கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஞாயிற்றுக்கிழமையான நேற்றும் வட மாநிலங்களில் இருந்து பலர் திருப்பூருக்கு வந்தனர்.

அவர்களிடம் கரோனா பரிசோதனைக்கான மாதிரிகள் சேகரிக்கும் பணி மற்றும் அவர்களது விவரங்களை பதிவு செய்யும் பணி நடைபெற்றது.

இதுதொடர்பாக, சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது: வெளி மாநிலங்களில் இருந்து வரும் அனைத்து தொழிலாளர்களிடமும் கரோனா பரிசோதனைக்கான மாதிரிகள் சேகரிக்கப்படுகின்றன.

திருப்பூரில் வேலைக்கு செல்லும் நிறுவனத்தின் முகவரி, தங்கும் முகவரி, அலைபேசி எண் உள்ளிட்ட தகவல்கள் அவர்களிடம் இருந்து பெறப்படுகின்றன. கடந்த 17 நாட்களில் ரயில்கள் மூலமாக திருப்பூருக்கு வந்த 9 ஆயிரம் வட மாநிலத்தவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 11 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறினர்.

SCROLL FOR NEXT