தமிழகம்

கஞ்சா கடத்தியவர்களைப் பிடித்த தனிப்படை போலீஸாருக்கு ஆணையர் பாராட்டு

செய்திப்பிரிவு

ஆந்திராவிலிருந்து சென்னைக்கு கஞ்சா கடத்தி வந்த கும்பலைப் பிடித்த தனிப்படை போலீஸாரை நேரில் அழைத்து காவல் ஆணையர் பாராட்டியுள்ளார்.

சென்னை பெருநகரில் போதைப் பொருட்கள் விற்பனை மற்றும் பதுக்கலைத் தடுக்க காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். அதன்படி, அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்கள் தலைமையிலும் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் திருவொற்றியூர், பேசின் ரோடு மற்றும் மாட்டு மந்தை சந்திப்பில் போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியே வேகமாக வந்த ஆந்திர மாநில பதிவெண்கள் கொண்ட இரண்டு கார்களை நிறுத்தி விசாரித்தனர். அப்போது கார்களில் வந்த 3 நபர்களும் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தனர். கார்களை பரிசோதித்தபோது, அதில் பெருமளவு கஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

அதன்பேரில் ஆந்திராவிலிருந்து சட்ட விரோதமாக கஞ்சா கடத்தி வந்த ஆந்திராவைச் சேர்ந்த சிவபிரசாத் (24), அதே மாநிலத்தைச் சேர்ந்த ரங்கோலி ராஜேஷ் ரெட்டி (32), சந்தோஷ் (30) ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 114 கிலோ எடை கொண்ட கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்நிலையில், கடத்தல் கும்பலை கைது செய்த உதவி ஆய்வாளர் எஸ்.விஜய், தலைமைக்காவலர் பிரபு, முதல்நிலைக் காவலர் முருகேஸ்வரன், காவலர் சதாசிவம், ஊர்க்காவல் படை வீரர்கள் சரத்குமார் மற்றும் அருண்ராஜா ஆகியோரை சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதியளித்தார்.

          
SCROLL FOR NEXT