சிவகங்கை நகரில் பாதாள சாக்கடை திட்டம் பகுதியளவு பயன்பாட்டுக்கு வந்தது.
சிவகங்கை நகராட்சியில் 2007-ல் பாதாளச் சாக்கடை திட்டம் தொடங்கப்பட்டது. குழாய் பதித்தல், சுத்தி கரிப்பு நிலையம், வீடுகளுக்கு இணைப்பு என 3 கட்டங்களாகப் பணிகள் நடந்தன. பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு முத்துப்பட்டியில் தினமும் 49.2 லட்சம் லிட்டர் கழிவு நீரை சுத்திகரிக்கும் நிலையம் அமைக்கப்பட்டது. மேலும் கழிவு நீரை பம்ப்பிங் செய்து சுத்திகரிப்பு நிலையத்துக்கு அனுப்ப மருதுபாண்டியர் நகர், மானாமதுரை சாலை ஆகிய இடங்களில் நீரேற்று நிலையங்கள் அமைக்கப்பட்டன.
இப்பணி 2009-ம் ஆண்டே முடிந்திருக்க வேண்டும். தற்போது வீடுகளுடன் பாதாள சாக்கடை குழாய் இணைக்கப்பட்டு வருகிறது. தற்போது பாதாள சாக்கடைத் திட்டம் பகுதியளவு பயன்பாட்டுக்கு வந்துள்ளது. தினமும் 15 லட்சம் லிட்டர் கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு பூங்காவுக்குப் பயன்படுத்தப்படுகிறது. மேலும் அரசனிமுத்துப்பட்டி ஊராட்சிக்குச் சொந்தமான 25 ஏக்கரில் விவ சாயம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முழு பணிகளும் முடிந்ததும் தினமும் 40 லட்சம் லிட்டர் கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு விவசாயத்துக்கு பயன்படுத்தப்படும் என நகராட்சி ஆணையர் அய்யப்பன் கூறினார்.