கோவில்பட்டி அருகே புதூர் பகுதியில் 5 மாதங்களுக்கு முன் பயிரிடப்பட்ட உணவு சோளம் தற்போது செழித்து வளர்ந்து அறுவடைக்கு தயாராக உள்ளது. நல்ல விலை கிடைப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
சோளம் பயிரில் பல வகைகள் உள்ளன. வெள்ளைச் சோளம், மக்காச்சோளம், கருப்பு சோளம், சிவப்பு சோளம், உணவு சோளம் என உள்ளன. இவை அனைத்துமே உணவுக்காக பயன்படுத்தப்பட்டாலும் சங்கரன் கோவில், தேனி, விழுப்புரம், ஈரோடு, கோவை பகுதி மக்களி டையே அரிசி போன்று இருக்கும் உணவு சோளத்தை சமைத்து உண்ணும் பழக்கம் உள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ரக சோளம் பயிரிடப்படுவதில்லை. கடந்த ஆண்டு பெய்த தொடர் மழையால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. எனவே, புதூர் அருகே உள்ள தோட்டத்தில் சுமார் 3.5 ஏக்கர் பரப்பளவில் கடந்த 5 மாதங்களுக்கு முன் உணவு சோளம் பயிரிடப்பட்டது. தற்போது அவை செழித்து வளர்ந்து, அறுவடைக்கு தயாராக உள்ளது. உழவு, மருந்து தெளிப்பு, களை பறிப்பு என, ஏக்கருக்கு ரூ.7 ஆயிரம் வரை விவசாயிகள் செலவு செய்துள்ளனர். ஏக்கருக்கு 8 குவிண்டால் வரை கிடைக்கிறது. ஒரு குவிண்டாலுக்கு ரூ.3,500 வரை விலை கிடைக்கிறது என, விவசாயிகள் தெரிவித்தனர்.
மாதிரி பண்ணைகள்
இதுகுறித்து கரிசல் பூமி விவசாயிகள் சங்கத் தலைவர் அ.வரதராஜன் கூறும்போது, “கடந்த காலங்களில் அரிசி புழக்கத்தில் இல்லாத சமயத்தில், தானிய வகைகளான கம்பு, சோளம், குதிரைவாலி, வரகு, சாமை ஆகியவையே உணவாக பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், கால மாற்றம் காரணமாக சுமார் 40 ஆண்டுகளாக அரிசி அதிகளவு பயன்படுத்தப்பட்டு வருகிறது. புழுங்கல் அரிசியில் ஓரளவு நச்சுத் தன்மை குறைந்திருந்தாலும், தானியங்களான கம்பு, குதிரைவாலி, வரகு, சாமை, சோளம் இவற்றுக்கு ஈடு இணை இல்லை. தற்போது சங்கரன்கோவில், தேனி, திண்டுக்கல், விழுப்புரம் பகுதிகளில் உணவு சோளம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
உணவு சோளத்துக்கு பின்னர் தான் கோவில்பட்டி சோளம் எனப்படும் நெட்டை சோளம் கண்டுபிடிக்கப்பட்டது.
தற்போது நெட்டை சோளம் மரபணு மாற்றப்பட்டு வீரிய ஒட்டுரக வகைகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளதால் அதிக விளைச்சலை கொடுக்கிறது. இதனால் பிற தானியங்களை இப்பகுதி விவசாயிகள் பெரும்பாலும் பயிரிடுவதில்லை.
உணவு சோளம் சாகுபடியை தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகரிக்க, மாதிரி பண்ணைகளை வேளாண் துறை அமைக்க வேண்டும்” என்றார்.