குண்டாறு அணை அருகே வருவாய்த்துறையினர் மற்றும் காவல்துறையினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். 
தமிழகம்

சுற்றுலா பயணிகள் தங்குவதற்கு குற்றாலம் பகுதிகளில் அறை வழங்க வேண்டாம்: விடுதி உரிமையாளர்களுக்கு போலீஸார் வேண்டுகோள்

செய்திப்பிரிவு

கரோனா நோய்த்தொற்று காரணமாக குற்றாலம் அருவிகளில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் சுற்றுலா பயணிகள் அங்கு தங்குவதற்கு அறைகள் வழங்க வேண்டாம் என விடுதி உரிமையாளர்களிடம் போலீஸார் வேண்டுகோள் விடுத்தனர்.

தென்காசி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையை யொட்டிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்கிறது. இதனால் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. கடந்த ஆண்டு கரோனா பரவல் காரணமாக சுமார் 9 மாதங்கள் குற்றாலம் அருவிகளில் குளிக்க தடை நீடித்தது. இந்நிலையில், இந்த ஆண்டும் கடந்த மே மாதம் 24-ம் தேதி முதல் தற்போது வரை குற்றாலம் அருவிகளில் குளிக்க தடை நீடிக்கிறது.

மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய குண்டாறு, மேக்கரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தனியார் இடங்களில் செயற்கையாக நீர் வீழ்ச்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த அருவிகளில் கட்டணம் வசூலித்து சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிப்பது வழக்கம்.

இந்நிலையில், தடையை மீறி குண்டாறு அணை அருகே உள்ள தனியார் அருவியில் பல ஆயிரக்கணக்கில் கட்டணம் வசூலித்துக் கொண்டு சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான வீடியோக காட்சி சமூக வலைதளங்களில் பரவியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதையடுத்து, தனியார் அருவிகளை மூடவும், அந்த பகுதிகளுக்கு சுற்றுலாப் பயணிகள் செல்வதைத் தடுக்கவும் தென்காசி மாவட்ட ஆட்சியர் கோபால சுந்தரராஜ் உத்தரவிட்டார். இதையடுத்து, குண்டாறு அணை அருகே காவல்துறை மற்றும் வருவாய்த்துறையினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். தனியார் அருவிக்கு குளிக்க வந்த சுற்றுலாப் பயணிகளை அவர்கள் எச்சரித்து திருப்பி அனுப்பினர்.

தென்காசி துணை காவல் கண்காணிப்பாளர் மணிமாறன் தலைமையில் குற்றாலத்தில் உள்ள விடுதி உரிமையாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடை பெற்றது. கூட்டத்தில், குற்றாலம் காவல் ஆய்வாளர் ஸ்டீபன் ஜோஸ், குற்றாலம் பகுதி விடுதி உரிமையாளர்கள் கலந்து கொண்டர்.

கூட்டத்தில், “கரோனா நோய் த்தொற்று காரணமாக குற்றாலம் அருவிகளில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் தங்குவதற்கு அறைகள் வழங்க வேண்டாம். நோய் தொற்றைத் தவிர்க்க விடுதி உரிமையாளர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என்று காவல்துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்தனர்.

SCROLL FOR NEXT